மதுரை : மதுரையில் தடை இருந்தும் பிளாஸ்டிக் ஒழிப்பை மாநகராட்சி மறந்து போனதால் நிலத்தடி நீர்மட்டம் மீண்டும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகள், ஆவணி மூல வீதிகள், மாசி வீதிகள், மாரட் வீதிகள் ஆகிய நான்கு வீதிகளில் கடந்த 2017 ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த வகையில் ஜனவரி 1ம் தேதி முதல் மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள நான்கு வீதி பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், கடைகள் உள்ளிட்டவற்றில் பிளாஸ்டிக் பைகளில் பொருட்களையோ, உணவுப்பொருட்களையோ வழங்கக்கூடாது.
மத்திய, மாநில அரசுகளின் சட்டவிதிகளின்படி பிளாஸ்டிக் பைகள் 50 மைக்ரான்களுக்கு குறைவாக பயன்படுத்தினால் சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு விற்கப்படும் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது நிலையாக, வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகாரர்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படும்.
மூன்றாவது கட்டமாக, பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு செய்யும் நிறுவனங்களை 50 மைக்ரான்களுக்கு கீழே உற்பத்தி செய்யக் கூடாது என்று விழிப்புணர்வு முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் மதுரை மாநகராட்சி வேகம் காட்டியது. தற்போது பிளாஸ்டிக் ஒழிப்பில் மாநகராட்சி பின்வாங்கி வருவதாக இயற்கை ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.
தடை போட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள் தாராளமாக கிடைக்கிறது. குறிப்பாக ஓட்டல்களில் பிளாஸ்டிக் பைகளில் உணவு ெபாருட்களை சர்வசாதாரணமாக வழங்குகின்றனர். குறிப்பாக யானைக்கல் பகுதிகளில் 50 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பைகளில் பழங்களை வழங்குகின்றனர். இவற்றையெல்லாம் தடுக்காமல் மாநகராட்சி வேடிக்கை பார்த்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதும் அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பிளாஸ்டிக் பைகளுக்கு விதித்த தடை உத்தரவு அமலில் இருந்தும் பிளாஸ்டிக் ஒழிப்பை கிட்டத்தட்ட மாநகராட்சி மறந்தேவிட்டது என இயற்கை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முதலில் விளம்பரத்திற்காக மாநகராட்சி அதிகாரிகள் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து விடுவார்கள்.
அதன் பின்னர் நடவடிக்கை எடுக்காமல் விட்டு விடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியே நாளடைவில் பிளாஸ்டிக் பொருட்கள் மதுரை மாநகரில் அதிகளவில் பெருகிவிட்டது. பல முறை தடை உத்தரவுகள் பிறப்பித்தும் முழுமையாக பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியவில்ைல. குப்பைகளில் அதிகளவில் பிளாஸ்டிக் பைகள் இருப்பதால் மழைநீர் பூமிக்கு அடியில் செல்வது தடுக்கப்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் உயராமல் தடைபடும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.