Home » போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் அமைப்புகளை கண்ணீர்புகை குண்டு வீசி கலைத்த போலீசார்!

போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் அமைப்புகளை கண்ணீர்புகை குண்டு வீசி கலைத்த போலீசார்!

0 comment

அதிரை எக்‌ஸ்பிரஸ்:-   இங்கிலாந்தில் தமிழர், கருப்பின மற்றும் ஆசிய, ஆப்ரிக்க மக்கள் உள்ளிட்ட பல்வேறு இன மக்கள் மீது இன பாகுபாடு கடைபிடிக்கப்படுவதை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை சிறிய கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் கலைத்தனர்.

சோசலிசக் கட்சி, தமிழ் சொலிடரிட்டி, அகதிகள் உரிமைக்கான அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், யுனைட் (Unite), யுனிசன் ( Unison) உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டன.

கடுங்குளிர், பனிப்பொழிவு இருந்த போதிலும், அதனை பொருட்படுத்தாது ஏராளமான மக்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். லண்டனில் உள்ள போர்ட்லாந்து வீதியில் (Portland Street) ஆரம்பமான இப்பேரணி இறுதியில் டவுனிங் வீதியில் (Downing Street) முடிவடைந்தது.

அகதிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், அகதிகளுக்கு வேலை செய்வதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும், அகதிகள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுதல் நிறுத்தப்பட வேண்டும், அகதிகளுக்கான தடுப்பு முகாம்கள் மூடப்பட வேண்டும், அனைவருக்குமான கல்வி, சுகாதாரம் உட்பட அனைத்து சேவைகளும் வழங்க வேண்டும், அனைவருக்குமான இலவச மருத்துவம் வழங்கப்பட வேண்டும், அடிப்படைச் சம்பளம் பத்து பவுண்டுகளாக உயர்த்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அகதிகள் உரிமைக்கான அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டது.

சிரிய மக்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும், துருக்கி நாட்டுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வது நிறுத்தப்பட வேண்டும், இன பாகுபாடு நிறுத்தப்பட வேண்டும், மக்கள் சேவைகளின் மீதான வெட்டுகள் (Cuts on Service) நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரணியின் போது, இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தை சென்றடைந்த போராட்டக்காரர்கள், அங்கு போடப்பட்டிருந்த தடைகளையும் உடைத்துக் கொண்டு பிரதமர் அலுவலகத்தின் வாசலை சூழ்ந்து கொண்டனர். இதனால் மக்களுக்கும் போலீசாருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். நிலைமை பதற்றமானதை அடுத்து, பிரதம அலுவலக வாசலை விட்டு போராட்டக்காரர்களை கலைப்பதற்கு சிறிய அளவிலான கண்ணீர் புகை குண்டுகளும் பிரயோகிக்கப்பட்டது.

வல்லாதிக்க நாடுகள் ஈராக் மீது படையெடுப்பை மேற்கொண்டு அழிவுகளை ஏற்படுத்தி 15 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டியும், சிரிய மக்களின் மீதான தாக்குதலைக் கண்டித்தும் இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் போராட்டக்காரர்கள் முடிவெடுத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter