Home » கால்பந்து உலகத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்தார் நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ!!

கால்பந்து உலகத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்தார் நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ!!

by admin
0 comment

அதிரை எக்ஸ்பிரஸ்:- கோல்…’ சில கோல்கள் போட்டியின் முடிவை மாற்றும். சில கோல்கள் கோப்பையை வென்று கொடுக்கும். ரசிகர்களைக் கொண்டாடவைக்கும், பரவசப்படுத்தும், தோல்வியின் விளிம்பில் அடிக்கப்படும் கோல்கள் ஆசுவாசப்படுத்தும். ஆனால், ஒருசில கோல்கள் மட்டுமே காலம் கடந்தும் பேசப்படும்; கால்பந்தின் அடையாளமாக விளங்கும். அந்த ஆட்டத்தின் வரலாற்றில் அதற்கென்று ஒரு இடம் பிடித்திருக்கும். அப்படியொரு கோல்தான், நேற்று கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்தது. ப்யூர் கிளாஸ்!

யுவன்டஸ் – ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் காலிறுதிப் போட்டி. கடந்த சீசன் ஃபைனலில் மோதிய இரு அணிகளும் இந்த முறை காலிறுதியிலேயே மோதிக்கொண்டதால், எக்கச்சக்க எதிர்பார்ப்பு. ‘மாட்ரிட்டின் அட்டாக்கா, யுவன்டஸின் டிஃபன்ஸா?’ எது வெல்லும் என்று பார்க்க, கால்பந்து உலகம் காத்திருந்தது. ஆனால், ரொனால்டோ ஒற்றை ஆளாக யுவன்டஸ் அணியை பஸ்பமாக்கிவிட்டார். இரண்டு கோல்கள்… அதுவும் away கோல்கள். போட்டியை அங்கேயே முடித்துவிட்டார். ஆனால், அந்த வெற்றி ஒன்றும் பெரிய விஷயமல்ல. அவர் அடித்த அந்த இரண்டாவது கோல்..! ரொனால்டோவை வெறுப்பவராக இருந்தாலும், அந்த கோலுக்காக அவருக்கு மரியாதை செலுத்தத் தூண்டும். அவரது ரசிகர்களைப் பரவசத்தின் எல்லைக்கே கொண்டுசொல்லும்.

ஆட்டத்தின் 64-வது நிமிடம், யுவன்டஸ் கோலின் வலது விங்கில் பந்தை வாங்கினார், ரியல் மாட்ரிட் டிஃபண்டர் டேனி கர்வகால். உடனே அதை பாக்ஸுக்குள் கிராஸ் செய்தார். ரொனால்டோ மின்னலெனப் பாய்ந்தார், back flip அடித்தார், பந்தை உதைத்தார் – கோ…………………….ல்! அற்புதமான overhead kick. ஒருநொடி, அரங்கமும் ஸ்தம்பித்து நின்றது. அதை வர்ணிக்கும் அளவுக்கு வர்ணனையாளர்களின் vocabulary-யில் வார்த்தைகள் இருந்திருக்காது. அவர்களும் பிரமித்துதான் நின்றார்கள். அங்கு என்ன நடந்தது என்று சுதாரிக்க அவர்களுக்குக் கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டது. ஒரு மூலையில் அமர்ந்திருந்த மாட்ரிட் ரசிகர்கள் கொண்டாட, யுவன்டஸ் ரசிகர்கள் மனமுடைந்துபோனார்கள்

அவர்களின் சாம்பியன்ஸ் லீக் கனவு முடிந்துவிட்டது. இரண்டாவது சுற்றில் away கோல்கள் அடித்து, மாட்ரிட்டைத் தோற்கடிப்பது கடினம். ரொனால்டோ அவர்களை வீழ்த்திவிட்டார். 2017 ஃபைனலில் கோப்பைக் கனவை கலைத்தவரும் அவர்தான். யுவன்டஸ் ரசிகர்கள் மொத்தமாக உடைந்துபோயிருந்தனர். ஆனால், மொத்த மைதானமும் எழுந்தது. அரங்கில் அமர்ந்திருந்த ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட யுவன்டஸ் ரசிகர்களும் எழுந்தார்கள். கைதட்டினார்கள். தங்களைத் தோற்கடித்த ரொனால்டோவுக்குக் கைதட்டினார்கள். அவர் காட்டிய மாய வித்தைக்கு மதிப்பளித்தார்கள். வழக்கமாக பெனால்டியில் கோலடித்தாலே ஆர்ப்பரிக்கும் ரொனால்டோ, இப்படியொரு கோல் அடித்தும் அமைதியாகக் கொண்டாடினார். யுவன்டஸ் ரசிகர்களைப் பார்த்து கைகூப்பினார், மனதில் கைவைத்து நெகிழ்ச்சியோடு திரும்பினார். தன்னைச் சுற்றி எழுந்து நின்று, தன் ஆட்டத்துக்கு மரியாதைசெலுத்தியவர்களுக்கு அவரும் மரியாதைசெலுத்தினார். இதுதானே கால்பந்து!

இதற்கெல்லாம் காரணம், அந்த ‘ஓவர்ஹெட் கிக்’. அதில் இருந்த பெர்ஃபெக்ஷன். ஓவர்ஹெட் கிக் அடிப்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. துல்லியம், நுட்பம், வேகம் அனைத்தும் டாப் லெவலில் இருக்க வேண்டும். அந்த வீரர் வலது காலில் அடிப்பவராக இருந்தால், இடது கால் முதலில் எழும்ப வேண்டும். அடுத்து, வலது காலை நன்றாக ஊன்றிக் குதிக்க வேண்டும். நன்றாகக் குதித்த பின், முதுகும் ஆடுகளமும் parallel ஆக வரும்வரை நன்றாகச் சாய வேண்டும். நல்ல உயரத்துக்கு எழுந்தபின், வலது கால் பந்தை உதைக்க வேண்டும். அதேசமயத்தில், வலது காலின் பலத்தை அதிகரிக்க, இடது கால் கீழ்நோக்கி நகர வேண்டும். விழும்போது காயம்படாமல் இருக்க, கைகளையும் சரியாகக் கீழே இறக்க வேண்டும். இவையனைத்தையும் அந்த 2-3 நொடிகளுக்குள் சரியாகச் செய்ய வேண்டும். அப்படி அடிக்கும் ஷாட், பந்தை கோல் நோக்கி சரியாகச் செலுத்த வேண்டும். இல்லையேல் அனைத்தும் வீண்.

டைம் பாஸ் ஆன்லைன்

 

 

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter