Home » `தண்ணீரை வங்கியில் டெபாசிட் செய்யணும்’ – போலீஸை மிரளவைத்த போராட்டக்காரர்கள் ..!!

`தண்ணீரை வங்கியில் டெபாசிட் செய்யணும்’ – போலீஸை மிரளவைத்த போராட்டக்காரர்கள் ..!!

0 comment
காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, ரிசர்வ் வங்கியில் தண்ணீரை டெபாசிட் பண்ண வலியுறுத்தும் ஒரு புதுமைப் போராட்டம், புதுக்கோட்டை நகரில் இன்று நடந்தது.

 
 

புதுக்கோட்டை நகரைச் சேர்ந்தவர், ஷெரீஃப். இவர், ‘தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி’ ஒன்றை நடத்திவருகிறார். இந்தக் கட்சியின் சார்பாக இவர் புதுக்கோட்டை நகரில் அவ்வப்போது நடத்தும் போராட்டங்கள் வித்தியாசமாக இருக்கும். அரசு ஆஸ்பத்திரியில் பேய்கள் விரட்டும் போராட்டம். இருண்டுகிடக்கும் மகப்பேறு மருத்துவமனைக்கு விளக்கேற்றும் வீதிப் போராட்டம் என்றெல்லாம் நடத்தி, கவனத்தை ஈர்த்தவர், இன்று காவிரிப் பிரச்னைக்காக வங்கியில் தண்ணீரை டெபாசிட் பண்ணும் போராட்டத்தை நடத்தி மிரளவைத்தார். ஷெரீஃப் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரும் ஐந்து லிட்டர் வாட்டர் கேன் சிலவற்றைத் தூக்கிக்கொண்டு வந்தார்கள்.

அதேபோல, இரண்டு லிட்டர் வாட்டர் பாட்டில்கள் சிலவற்றை சூட்கேசில் வைத்து அவற்றை டெபாசிட் செய்வதற்காக புதுக்கோட்டை கீழராஜ வீதியில் உள்ள ஸ்டேட் வங்கியின் உள்ளே நுழைய முற்பட்டனர். அவர்களைக் காவலர்கள் உள்ளே நுழைய விடாமல் தடுத்தார்கள். “நாங்கள் தண்ணீரை பேங்க்ல டெபாசிட் பண்ணணும். உள்ளே விடுங்க” என்று ஷெரீஃப் கூற, வங்கிக்குள் இருந்த வாடிக்கையாளர்கள் எல்லோரும் திரும்பிப் பார்த்துத் திகைத்தார்கள். சிலர் நகைத்தார்கள்.

 
 

இதைத் தொடர்ந்து, கோஷமிட்டவர்களை போலீஸார் கைதுசெய்து, அருகில் உள்ள மண்டபத்தில் தங்கவைத்தனர். அங்கிருந்த ஷெரீஃபை தொடர்புகொண்டு பேசினோம். “முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளாவும், பாலாறு விஷயத்தில் ஆந்திராவும், காவிரி விவகாரத்தில் கர்நாடகாவும் தமிழ்நாட்டை வஞ்சிக்கின்றன. இதற்கு சமரசம் பண்ணவேண்டிய மத்திய அரசும் கர்நாடகாவுக்கு துணையாக நிற்கிறது. நமக்கு வேண்டிய தண்ணீர் உரிமையைப் பெற முடியாமல் இருக்கிறோம். இதுகுறித்து, மக்களின் கவனத்தை ஈர்க்கவே இந்தப் போராட்டத்தை நடத்தினோம். எதிர்கால சந்ததியினருக்கு வங்கிகளில் காசு, பணம் டெபாசிட் பண்ணுவதைவிட, குடிதண்ணீரை டெபாசிட் பண்ணவேண்டிய மிக ஆபத்தான காலத்தில் இருக்கிறோம் என்பதை மக்களுக்கு உணர்த்தவே இந்தப் போராட்டம்” என்றார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter