தமிழகம், குஜராத், பீகார் உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் ஏடிஎம்களில் பணம் கிடைக்காததால் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். ஒரே இரவில் திடீரென இந்த அறிவிப்பு வெளியானது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் மக்கள் தங்கள் கைகளில் இருந்த பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட நோட்டுகளை மாற்ற முடியாமல் சிரமப்பட்டனர். ஏடிஎம்கள், வங்கிகள் என எங்குமே பணம் இல்லாததால் பொதுமக்கள் அந்த நேரத்தில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மெல்ல அந்தப் பிரச்னை சரியானது. இந்நிலையில் தற்போது தமிழகம், குஜராத், பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏடிஎம்களில் போதிய அளவில் பணம் இல்லை. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
குஜராத் மாநிலம் வதோதராவில் ஒரேயொரு ஏடிஎம்மில் மட்டுமே பணப்பட்டுவாடா நடந்து வருகிறது. அதிலும் 10,000 ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க முடிவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அந்தப் பணத்தை எடுக்கவும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதேபோல மத்தியபிரதேசம், டெல்லி, பீகார், குஜராத், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் பணம் நிரப்பப்படாமல் ஏடிஎம் மைய சேவை முற்றிலும் முடங்கியுள்ளது.
இதுகுறித்து நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “பீகார், மணிப்பூர் உள்ளிட்ட மாநில மக்கள் பணம் இல்லாமல் கொஞ்சம் சிரமப்படுகின்றனர். ஏடிஎம்களில் போதுமான அளவிற்கு பணத்தை நிரப்ப வங்கிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறோம்”என்றார்.
ரிசர்வ் வங்கியின் சமீபத்திய ஆய்வு ஒன்று, ஆந்திரப் பிரதேசம், பீகார், கர்நாடகா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் வங்கிகளில் நடக்கும் டெபாசிட்டை விட பணம் எடுப்பதுதான் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதேபோல புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 200 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்களில் செலுத்துவதற்கான தொழில்நுட்பம் இன்னும் ஒருசில இடங்களில் முழுமையாக நடைபெறவில்லை. இதுவெல்லாம் ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஏடிஎம் தொழில்நுட்ப பிரச்னையை விரைவில் சரிசெய்ய வங்கிகளுக்கு நிதியமைச்சகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை பெரிய அளவில் பாதிப்பில்லை என்றாலும் வேலூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை பகுதிகளில் பணத்தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. பெரும்பாலான ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்கள், தங்களின் பணத்தை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். பணத்தட்டுப்பாடு நிலவுவதை அறிந்த மற்ற மாவட்ட மக்களும் தங்களுக்கு தேவையான பணத்தை ஏடிஎம்களில் இருந்து முன்னெச்சரிக்கையாக எடுத்து வருகின்றனர். இதனால் மேலும் பணத்தட்டுப்பாடு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிக் கட்டணம் செலுத்தப்பட்டு வரும் நிலையில், ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க முடியாததால் பெற்றோர்களும், பொதுமக்களும் செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர். மேலும் அன்றாட செலவுகளுக்கும் பணம் எடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.