12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்படும் வகையில் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் (போக்ஸோ) திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
காஷ்மீர் கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஒருவர் 7 நாட்களாக பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம், உன்னவ் தொகுதியில் 14 வயது சிறுமியை பாஜக எம்எல்ஏ பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் ஆகியவற்றை தொடர்ந்து நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து சிறுமிகளுக்கு எதிராக வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன. இதனிடையே இதை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை செய்வோருக்கு தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் போஸ்கோ சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தகவல் அளித்தது.
இந்நிலையில் இன்று மத்திய அமைச்சரவை கூடியது. மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறுமிகளை வன்கொடுமை செய்வோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.