அதிரை எக்ஸ்பிரஸ்:- திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடத்தியதாக பல வருடங்களாக உலவிக் கொண்டிருந்த வதந்திக்கு நடிகை பாத்திமா பாபு இப்போது விடையளித்துள்ளார்.
‘1990ஸ் கிட்ஸ்கள்’ தங்கள் வாழ்நாளில் அடிக்கடி கேள்விப்பட்ட ஒரு வதந்தி இது. சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக டீக்கடை பேச்சுகளாகவும், பரிணாம வளர்ச்சி பெற்று, சமூக வலைத்தளங்களில் விமர்சன கணைகளாகவும் சுற்றி வந்த தகவல் அது.
இந்த வதந்தி திமுகவுக்கு எதிராக எதிர்க்கட்சி நெட்டிசன்களால் சமீபகாலமாக அதிகமாக முன்னெடுக்கப்படும் தாக்குதல் ஆயுதமாக மாறியுள்ளது. இந்த நிலையில்தான், மவுனம் கலைத்து பேசியுள்ளார் பாத்திமா பாபு.
பாத்திமா பாபு தனது இளமை காலங்களில் கூட இதுகுறித்து வெளிப்படையாக பேசாத நிலையில், சீரியல் நடிகையாக செட்டிலாகிவிட்ட சூழலில் ஏன் இப்போது இதுபற்றி பேசினார் என்பது பலரது மனதிலும் எழும் கேள்வியாக உள்ளது. 10 வருடங்களுக்கும் மேலாக ஜெயா டிவியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் பாத்திமா பாபு. ஜெயலலிதாவின் கட்சியில் இணைந்து அவரின் நம்பிக்கைக்குரியவராக மாறியதால்தான், ஜெயா டிவியில் அவர் தொடர்ந்து செய்தி வாசிப்பாளராக இருந்தார் என கூறப்படுவதுண்டு.
ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக அவரது கட்சியில் இருப்பது, ஒரு ‘பாதுகாப்புக்காகத்தான்’ என்ற வதந்தியும் உலவியது. ஆனால், ஜெ. மறைவுக்கு பிறகு நிலைமை மாறிவிட்டது. தர்ம யுத்தம் செய்வதாக அறிவித்து ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக மாறிய சில நாட்களில், பாத்திமா பாபு அந்த அணியில் தன்னை இணைத்துக் கொண்டார். இதனால், ஜெயா டிவியில் அவர் பதவி வகிக்க முடியவில்லை. இதையடுத்து சீரியல்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
சசிகலாவை சின்னம்மா என்று குறிப்பிட்டு செய்தி வாசிக்க சொல்வது ஏற்புடையதாக இல்லை என்று பாத்திமா பாபு தெரிவித்திருந்தார். பன்னீர்செல்வம் அணி பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தபோதும் அங்குதான் இருந்தார். இப்போது பன்னீர்செல்வம் அணியில் இருந்தாலும், ஸ்டார் பேச்சாளரான அவர் இப்போதெல்லாம் கருத்து கூறுவதே இல்லை. பன்னீர்செல்வம் அணியில் இருப்போருக்கு உரிய பதவிகள் கிடைக்கவில்லை என்பதும் பாத்திமா பாபு விலகி இருக்க காரணமாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான், திடீரென, ஸ்டாலின் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் பாத்திமா பாபு. ஸ்டாலின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து பாத்திமா பாபு வட்டாரத்தில் கேட்டபோது, “சமூக வலைத்தளங்களில் சமீபகாலமாக பாத்திமா பாபு-ஸ்டாலின் பற்றிய விவாதங்களை எதிர்க்கட்சியினர் முன்னெடுப்பதால், பாத்திமா பாபு அதிருப்தியில் இருந்ததாகவும், எனவே உண்மையை சொல்ல தீர்மானித்தார்” என்கிறார்கள். ஆனால் வேறு சில வட்டாரங்களோ, பாத்திமா பாபு திமுகவுக்கு இடம் பெயர காய் நகர்த்தி வருவதாக கண் சிமிட்டுகிறார்கள். இதற்கெல்லாம் விடை இன்னும் சில நாட்களில் தெரிய வரும்.