Home » என்.ஐ.ஏ அதிகாரிகள் டார்ச்சர் செய்கிறார்கள்’ – போலீஸ் கமிஷனரிடம் கண்ணீர்விட்ட கோவை இளைஞர்!

என்.ஐ.ஏ அதிகாரிகள் டார்ச்சர் செய்கிறார்கள்’ – போலீஸ் கமிஷனரிடம் கண்ணீர்விட்ட கோவை இளைஞர்!

by admin
0 comment

அதிரை எக்ஸ்பிரஸ்:-  விசாரணை என்ற பேரில், அழைத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் தன்னை டார்ச்சர் செய்வதாகக் கோவையைச் சேர்ந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

கோவை, செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஃபெபின் ரஹ்மான். இன்ஜினீயரிங் படிப்பை முடித்துள்ள இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கோவை என்.ஐ.ஏ அதிகாரிகள், தன்னை விசாரணைக்கு அழைத்து டார்ச்சர் செய்வதால், தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோவை போலீஸ் கமிஷனர் பெரியய்யாவிடம் மனு அளித்தார்.

இதுகுறித்து ஃபெபின் கூறுகையில்,”கடந்த 11-ம் தேதி என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் இருந்து ஆஜராகுமாறு சம்மன் வந்தது. இதையடுத்து, ரேஸ்கோர்ஸில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் நான் ஆஜரானேன்.
செல்போன் அழைப்பு சம்பந்தமாக விசாரணை செய்ய வேண்டும் என்று கூறிதான் அழைத்தனர். ஆனால், அதுபற்றி விசாரிக்காமல், பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு முறை குறித்துதான் விசாரணை நடத்தினர். மேலும், தாங்கள் கூறுவதுபோல நடந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால், பெற்றோரை இல்லாமல் ஆக்கிவிடுவோம். வேலை இல்லாமல் செய்திடுவோம் என்று மிரட்டினர். இதனால், நான் அவர்கள் சொன்னதுபோல நடந்துகொண்டேன்.

பிறகு, எப்போது அழைத்தாலும் வர வேண்டும் என்றுகூறி, 14-ம் தேதி வரச் சொன்னார்கள். அப்போது, நாங்கள் சொன்ன மாதிரி பேசு என்று கூறி லேப்டாப்பில் ரொக்கார்டு செய்தனர். நான் ஏன் ரெக்கார்டு செய்கிறீர்கள் எனக் கேட்டதற்கு, நாங்கள் சொல்வதுபோல நடந்துகொள்; அதான் உனக்கு நல்லது எனக் கூறி மிரட்டினர். பின்னர், மீண்டும் கடந்த 18-ம் தேதி அழைத்து என்னை துன்புறுத்தினர். என் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து 19-ம் தேதி மீண்டும் போன் செய்து, என்.ஐ.ஏ ஆபீஸுக்கு வருமாறு கூறினார்கள். ஆனால், சம்மன் அனுப்பினால்தான் நான் வருவேன் என்று கூறினேன். நீ அவ்வளவு பெரிய ஆள் ஆகிட்டியா இரு எனக் கூறி, அரை மணி நேரத்தில் சம்மன் அனுப்பினர். மிகுந்த மன உளைச்சலில் இருந்ததால், நான் ஆஜராகவில்லை. இதனால், சென்னையில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பினார்கள்.

சென்னைக்கு பஸ் ஏறினேன். ஆனால், உடலும் மனமும் ஒத்துழைக்கவில்லை. வேலைக்கும் செல்லவில்லை. வீட்டுக்கும் செல்லவில்லை. அப்படியே தற்கொலை செய்துவிடலாம் என்றிருந்தேன். தந்தையின் ஞாபகம் வந்ததால், நேற்று வீட்டுக்கு வந்தேன். நான் ஆரம்பத்தில் எஸ்.டி.பி.ஐ நடத்திய சில போராட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறேன். அவ்வளவுதான். அவர்கள் என்னை சந்தேகப்படுவது மிகவும் வேதனையளிக்கிறது. எனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்றார்.

ஃபெபினின் தந்தை செருப்புக் கடையில் பணிபுரிகிறார். அவருக்கு தாய், ஒரு அண்ணன் மற்றும் தங்கையும் உள்ளனர். தற்போது, இந்த சம்பவத்தால், வீடே சுடுகாடு போல ஆகிவிட்டது என்று அவர்கள் கண்ணீர் விடுகின்றனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter