நீட் எனும் நாசகார தேர்வு காவு கொள்ளும் உயிர்பலிகள் தொடருகிறது. அன்று நீட்டை கண்டித்து அனிதா தூக்கிட்டு மாண்டார். இன்று மகனை கேரளாவுக்கு தேர்வு எழுத அழைத்துச் சென்ற தந்தை கிருஷ்ணசாமி மாரடைப்பால் மரணித்துப் போயுள்ளார்.
அனைத்து மாநில மருத்துவ படிப்புகளுக்கு நீட் எனும் பொதுநுழைவுத் தேர்வை மத்திய அரசு அறிவித்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது தொடர் கோரிக்கை. இதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் அனிதா தூக்கிட்டு மாண்டு போனார்.
தமிழரின் கல்வி உரிமையை பறிப்பதைக் கண்டித்து அனிதா தற்கொலை செய்தது தமிழகத்தை பெரும் கொந்தளிக்க வைத்தது. ஆனாலும் மத்திய அரசு இதைப்பற்றி ஒருதுளியும் கவலைப்படாமல் இந்த ஆண்டும் நீட்டை திணித்தது.
இம்முறை தமிழக மாணவர்களை அகதிகளைப் போல இந்தியாவின் எல்லை மாநிலங்களுக்கு விரட்டியடித்திருக்கிறது. அதுவும் பல நூறு பேரை பலி கொண்ட புழுதிப் புயல் வீசும் ராஜஸ்தானுக்கும் யுத்த பதற்றம் நீடிக்கும் சீனா எல்லையான சிக்கிமுக்கும் கூட தமிழக மாணவர்களை நீட் தேர்வு எழுத கட்டாயப்படுத்தியிருக்கிறது மத்திய அரசு.
அத்துடன் 5,000க்கும் அதிகமான தமிழக மாணவர்களை கேரளாவில் பல தேர்வு மையங்களில் எழுத வைத்திருக்கிறார்கள். இப்படி கேரளாவுக்கு தேர்வு எழுத சென்ற இடத்தில்தான் கஸ்தூரி மகாலிங்கம் என்ற திருத்துறைபூண்டி மாணவரின் தந்தை கிருஷ்ணசாமி மாரடைப்பால் மரணித்துள்ளார்.
அன்று அனிதா.. இன்று கிருஷ்ணசாமி… இப்படி இன்னும் எத்தனை எத்தனை உயிர்களைத்தான் காவு வாங்கப் போகிறதோ இந்த நீட் எனும் கொடுங்கோலன் !