21 ஆம் நூற்றாண்டில் பெரும்பாலானோருக்கு இருக்கும் ஒரு ஆரோக்கிய பிரச்சனை தான் லாக்டோஸ் சகிப்புத்தன்மை தான். மேலும் பலருக்கு உடலில் அழற்சி ஏற்படுவதற்கு அன்றாடம் குடித்து வரும் பால் கூட காரணமாக இருக்கலாம். ஆம், சிலருக்கு பால் கூட அழற்சியை உண்டாக்கலாம். இதனால் அவர்களால் பாலைக் குடித்தாலே சருமத்தில் அழற்சியை சந்திக்க நேரிடும். இப்படி ஒருவர் பால் குடிப்பதைத் தவிர்த்தால், பின் கால்சியம் குறைபாடு ஏற்பட்டு, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
மனித உடலுக்கு கால்சியம் சத்து மிகவும் இன்றியமையாதது. கால்சியம் எலும்புகளுக்கு மட்டுமின்றி, பற்களின் ஆரோக்கியத்திற்கும் அவசியமானது. சரி, கால்சியம் சத்தை பாலின் மூலம் தான் பெற முடியுமா என்ன? நிச்சயம் இல்லை. கால்சியம் சத்து பாலைத் தவிர, வேறு சில உணவுகளிலும் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. உங்களுக்கு பாலைத் தவிர வேறு எந்த உணவுகளில் எல்லாம் கால்சியம் சத்து உள்ளது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்.
◆சீஸ்
சீஸில் பல வகைகள் உள்ளன. அனைத்து வகையான சீஸிலும் கால்சியம் அதிக அளவில் உள்ளது. இருந்தாலும், சீடர் சீஸ் மிகவும் பிரபலமான மற்றும் கால்சியம் அதிகம் நிறைந்துள்ளது. 100 கிராம் சீடர் சீஸில் 721 மிகி கால்சியம் உள்ளது. மற்ற வகை சீஸில் 100 கிராமில் 500-1000 மிகி கால்சியம் உள்ளது.
◆கொலார்டு கீரை
கொலார்டு கீரையை ஒருவர் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மிகவும் நல்லது. இந்த கீரையில் கால்சியம் அதிகம் இருப்பதோடு, இதில் உள்ள அதிகளவிலான பீனோலிக் பண்புகள், புற்றுநோய் மற்றும் இதய நோயை எதிர்த்துப் போராடி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
◆கேல்
கீரைகளில் கேல் கீரை மிகவும் ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த கீரையாகும். இந்த கீரையில் கால்சியம் மற்றும் வைட்டமின் கே போன்றவை அதிகமாக உள்ளது. அதோடு ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளும் அதிகம் உள்ளது. இதனால் இது புரோஸ்டேட் மற்றும் குடல் புற்றுநோய் போன்றவற்றை எதிர்த்துப் போராடி பாதுகாக்கும்.
◆ஆர்கானிக் தயிர்
பால் பொருட்களில் ஒன்றான தயிரிலும் கால்சியம் சிறப்பான அளவில் நிறைந்துள்ளது. அதிலும் வீட்டிலேயே இயற்கை முறையில் நொதிக்க வைக்கப்பட்டு தயிரை தயாரித்து சாப்பிடுங்கள். இதனால் கால்சியம் கிடைப்பதோடு, நல்ல பாக்டீரியாக்களான புரோபயோடிக்குகளும் கிடைக்கும்.
◆எள்ளு விதைகள்
உணவில் சுவைக்காகவும், மணத்திற்காகவும் சேர்க்கப்படும் எள்ளு விதைகளிலும் பாலை விட அதிகளவு கால்சியம் நிறைந்துள்ளது. மேலும் எள்ளு விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புக்கள் மற்றும் டயட்டரி நார்ச்சத்துக்கள் அதிகளவு உள்ளது. எனவே இந்த விதைகளை உங்கள் டயட்டில் சேர்த்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
◆பசலைக்கீரை
பசலைக்கீரையில் கால்சியத்தை தவிர, இதய ஆரோக்கியம் மற்றும் செயல்பாட்டிற்குத் தேவையான சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் பசலைக்கீரையில் உள்ள நைட்ரேட், இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். எனவே இந்த பசலைக்கீரையை ஒருவர் அடிக்கடி உணவில் சேர்த்து வர, உடல் ஆரோக்கியம் மேம்படும்.
◆டோஃபு
சோயா பால் கொண்டு தயாரிக்கப்படும் டோஃபுவில் கலோரிகள் குறைவு மற்றும் புரோட்டீன்கள் அதிகம். அதே சமயம் இதில் கால்சியம், மக்னீசியம் மற்றும் இரும்புச்சத்தும் அதிகளவு உள்ளது. எனவே டோஃபுவை அடிக்கடி உணவில் சேர்த்து, உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.
◆சூரியகாந்தி விதைகள்
சூரியகாந்தி விதைகள் ஸ்நாக்ஸ் வேளைகளில் சாப்பிட ஏற்றது. இந்த விதைகளை சாலட்டுக்களின் மீதும் தூவி உட்கொள்ளலாம். இவற்றிலும் கால்சியம் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. மேலும் இந்த விதைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மட்டுமின்றி, வைட்டமின் ஈ மற்றும் காப்பர் சத்துக்களும் உள்ளன. இச்சத்துக்கள் இரத்த வெள்ளையணுக்களின் ஆரோக்கியத்திற்கு அவசியமாகும்.
◆பீன்ஸ்
பீன்ஸ்களில் வைட்டமின் சி, நார்ச்சத்து மட்டுமின்றி, கால்சியம் சத்தும் அடங்கியுள்ளது. இந்த பீன்ஸை ஒருவர் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், அது கால்சியம் குறைபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். முக்கியமாக பீன்ஸை சமைக்கும் போது எண்ணெய் அதிகம் சேர்க்காமல், ஆவியில் வேக வைத்து சமைத்து சாப்பிடுவதன் மூலம், இதன் முழு சத்துக்களையும் பெறலாம்.
◆அத்திப்பழம்
அத்திப்பழம் மிகவும் சுவையான, ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த அற்புதமான பழம். அந்த பழத்தில் எலும்புகளின் வலிமைக்கு தேவையான கால்சியம் அதிகம் உள்ளது. அத்திப்பழத்தை ஒருவர் நற்பதமாகவோ அல்லது உலர்ந்த நிலையிலோ உட்கொள்ளலாம். ஸ்நாக்ஸ் நேரத்தில் கண்டதை சாப்பிடுவதற்கு பதிலாக, உலர்ந்த அத்திப்பழத்தை சாப்பிட, அதன் முழு நன்மையையும் பெறலாம்.