Friday, March 29, 2024

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தின சிறப்புக்கட்டுரை : குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்கட்டும் !

Share post:

Date:

- Advertisement -

குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின (ஜூன் 12) சிறப்புக்கட்டுரை :

ஒவ்வொரு நாளும் காலையில் கதவைத் திறந்தால் நாளிதழ்களும் பால் பாக்கெட்டுகளும் வந்து விழுகின்றன.

தெருவோரத்திலிருக்கும் சேட்டன் டீக்கடைக்குச் சென்றாலும், அண்ணாச்சிக் கடைக்குச் சென்றாலும் உங்களை வரவேற்பது யாராவது ஒரு சிறுவனாக இருப்பான். உணவகத்தில் நீங்கள் சாப்பிட்ட பின்னர் இலையை எடுப்பது ஒரு சிறுமியாக இருப்பாள்.

உங்கள் டூவீலர் பஞ்சரானாலும், பழுதானாலும் முதலில் அதைக் கவனிப்பது பிஞ்சுக் கரங்களாகத்தான் இருக்கும்.

இப்படி உங்களின் நாட்களை அழகாக நகர்த்திக்கொண்டு தங்களின் நாட்களை அழித்துக்கொண்டிருப்பது குழந்தைத் தொழிலாளர்கள்தான்.

அதிகபட்சமாக நாள்தோறும் நீங்கள் அவர்களை எதிர்கொள்வது சில மணித்துளிகள்தான். ஆனால், அவர்களோ மணிக்கணக்கிலும் நாட்கணக்கிலும் ஒரே வேலையை எந்த அலுப்புமின்றி செய்துகொண்டிருப்பார்கள்.

அவர்களுக்கு 8 மணி நேரப் பணி என்றும் இருந்ததில்லை. கடை திறந்ததிலிருந்து மூடும்வரை, ஓய்வின்றி உழைக்க வேண்டும். மிகக் குறைவான கூலியே அளிக்கப்படும்.

இப்படி எந்தச் சட்ட விதிகளிலும் அடங்காத கொடூரமான சுரண்டல் முறைதான் குழந்தைத் தொழிலாளர் முறை.

சிதைக்கப்படும் ஆளுமை !

குழந்தைத் தொழிலாளர் முறை குழந்தைத் தன்மையை அழிப்பது மட்டுமின்றி அவர்களைக் கல்வி கற்க விடாமல் தடுத்து, அவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடிவிடுகிறது. கல்வி இன்றி, சத்துணவின்றி, விளையாட்டின்றி, அன்போ, பாசமோ இன்றி எந்நேரமும் உழைப்புச் சுரண்டலில் ஈடுபடுத்தப்படும் ஒரு குழந்தையின் ஆளுமை எப்படி ஆரோக்கியமானதாக வளர முடியும்? ஈவு இரக்கமின்றி இளங்குருத்திலேயே மனித வாழ்வை நசுக்குவதுதான் குழந்தைத் தொழிலாளர் முறை.

விவசாயச் சமூகத்தில் பண்ணைகளின் விவசாய வேலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வந்தார்கள். பின்னர், தொழிற்புரட்சி தொடங்கியதிலிருந்து பன்மடங்கான வேலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

குழந்தைகள் செய்யும் வேலைகள் !

தீப்பெட்டிக் குச்சிகளை அடுக்குவதிலிருந்து கணிப்பொறியின் சிப்புகளை அடுக்குவது வரை, பல்வேறு வேதியப் பொருட்களையும் சாயங்களையும் அளவோடு லாகவமாகக் கலப்பது, முறுக்கு பிழிவது, பூந்தியைச் சிதறாமல் இனிப்புகளின் மீது தூவிவிடுவது, சிறு வெடிகளில் கந்தகத்தையும் வெடி மருந்துகளையும் வீணாக்காமல் நிரப்புவது, சிறு பேட்டரிகளை அடுக்குவது, அவற்றின் கழிவுகளிலிருந்து பொருட்களைப் பிரித்தெடுப்பது, நெய்த பஞ்சு இழைகளைக் கோனில் சுற்றுவது போன்ற நுட்பமான வேலைகளுக்கு நளினமான மென்மையான சிறிய விரல்கள் வேண்டும். அதற்குக் குழந்தைகள்தான் தேவைப்பட்டார்கள்.

ஒரே வேலையைப் பல மணி நேரம் செய்யவைப்பது, அவர்களுக்கு அலுப்புத்தட்டாமல் இருக்க சினிமா பாடல்கள், ஜோக்குகளை ஒலிபரப்பச் செய்வது (தங்களுக்கிடையே பேசி அரட்டை அடிப்பதைத் தடுத்து, பேசாமல் அவர்களை வேலை செய்ய வைக்கும் நோக்கமும் இதில் இருக்கிறது) அவர்களுக்குப் பிடித்த இனிப்புத் தின்பண்டங்களைக் கொடுப்பது போன்றவற்றின் மூலம் 10இலிருந்து 12 மணிநேரம் வரை வேலை வாங்குவது வழக்கம். குழந்தைகளைத் தொழிலாளர்களாக அமர்த்தினால்தான் இதெல்லாம் சாத்தியம் என்பதைக் கண்டுகொண்டது முதலாளியம். தனது லாப வெறிக்குக் குழந்தைகளைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொண்டது. குழந்தைகளின் குழந்தைப் பருவத்தையும் மகிழ்ச்சியையும் கல்வியையும் எதிர்காலத்தையும் சிதைக்கும் இந்த அமைப்பு முறை இனியும் தொடர்கிறது.

இந்தியாவின் நிலை

ஐநாவின் யுனிசெஃப் அமைப்பின் ஆய்வுப்படி உலகம் முழுவதும் 250 மில்லியன் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். இந்தியாவில் 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 33 மில்லியன் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். இதில் 80 விழுக்காட்டினர் தலித் குழந்தைகள். 20 விழுக்காட்டினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குழந்தைகள். இவர்கள் சாதி சார்ந்த பாரம்பரியத் தொழில்களில்தான் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில்தான் அதிகமான (8,96,301) குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். இதைத் தொடர்ந்து பிகார் (4,51,590), ஆந்திரா (4,04,851), ராஜஸ்தான் (2,52,338), தமிழகம் (1,51,431) ஆகிய மாநிலங்களில் அதிகமான குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். இதில் கேரளாவில் குழந்தைத் தொழிலாளர்களில் 83 விழுக்காடு அடிப்படைக் கல்வியறிவு பெற்றவர்கள். தமிழகத்தில் 81.3 விழுக்காடு குழந்தைத் தொழிலாளர்களும் கல்வியறிவு பெற்றவர்களே.

உலக அளவில் அபாயகரமான தொழில்களில் மட்டுமின்றி பாலியல் தொழில்களிலும் அதிகமாகக் குழந்தைகளே ஈடுபடுத்தப்படுகின்றனர். உலக அளவில் ஒவ்வோர் ஆண்டும் 20 லட்சம் குழந்தைகள் பாலியல் தொழிலுக்காக விற்கப்படுகின்றனர்.

ஐநாவின் உடன்பாடு

குழந்தைத் தொழிலாளர்களின் பிரச்சினையை உணர்ந்த ஐநா குழந்தைகளின் உரிமைகள் உடன்பாட்டில் (Convention on Child Rights — CRC) இதை ஒழிப்பதை முக்கிய அம்சமாகக் கொண்டது. இந்தியா இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டு முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக ஏற்புறுதி (Ratification) செய்யவில்லை. குழந்தையின் வயது விஷயத்தில் சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாக விதிவிலக்கு பெற்றுக்கொண்டது. அதாவது ஐநாவின் ‘சிஆர்சி’யின்படி குழந்தையின் வயது என்பது 0-18 வரை வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் குழந்தையின் வயது 0-14 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. இது எந்த அறிவியல் அடிப்படையும் அற்றது. இங்கிருந்தே பிரச்சினை தொடங்குகிறது.

இந்தியாவின் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டமும் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளைத் தொழிலாளர்களாக ஈடுபடுத்தக் கூடாது என்று கூறியுள்ளது. திருமணச் சட்டம் நீங்கலாக அனைத்துச் சட்டங்களும் 14-18 வயது வரை உள்ளவர்களை குழந்தைகளாகக் கருதுவதில்லை. அவர்களை வயது வந்தவர்களாகவே கருதுகின்றன. ஆனால், சொத்துரிமையில் மட்டும் 21 வயதைத்தான் சொத்துரிமைக்கான வயதாகச் சட்டம் அங்கீகரிக்கிறது.

குலத்தொழில் முறைக்குத் திரும்புகிறதா ?

தற்போது இந்தியாவின் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டம் திருத்தப்பட்டு, 14 வயதிற்குட்பட்டவர்கள் குடும்பம் சார்ந்த தொழில்களிலும் பொழுதுபோக்குத் தொழில்களிலும் (சர்க்கஸ் போன்றவை நீங்கலாக) ஈடுபடலாம் என்று திருத்தப்பட்டுள்ளது. பழைய சட்டத்தில் அபாயகரமான தொழில்கள் 83ஆகப் பட்டியலிடப்பட்டிருந்தன. அவை குறைக்கப்பட்டன. குழந்தைகளைப் படிக்கவிடாமல் தடுத்து அவர்களைக் குடும்பத் தொழில் என்ற பெயரில் குலத் தொழிலுக்கு கொண்டுவரக்கூடிய சாத்தியத்தைக் கொண்டிருப்பதுதான் திருத்தப்பட்ட சட்டத்தில் உள்ள அபாயம். இது வருணாசிரம முறையை நிலைநிறுத்துவதற்கான முயற்சி என்ற விமர்சனம் எழுந்துள்ளது. குழந்தைகள் இனி படிக்கவே முடியாத நிலையை இந்தத் திருத்தம் ஏற்படுத்திவிடும் என்றும் அஞ்சப்படுகிறது.

குழந்தைகளின் பணியை ஆதாரமாகக் கொண்ட துறைகளும் தொழில்களும் குழந்தைமையைச் சிதைத்து அவர்கள் எதிர்காலத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிடக்கூடியவை. ஒரு சில குழந்தைகளுக்கு மட்டும் குழந்தைப் பருவமும் கல்வி வாய்ப்பும் இதன் மூலம் மறுக்கப்படுகின்றன. இது சமத்துவத்தையும் கடுமையாகப் பாதிக்கும். குழந்தைகளின் எதிர்காலம் பாழாவது என்பது ஒரு நாட்டின் எதிர்காலத்தைப் பாழடிப்பதுதான் என்பதைப் புரிந்துகொண்டு அதைத் தவிர்க்கும் வகையில் அரசுகளும் தொழில் துறையும் பெற்றோரும் செயல்பட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...