அதிராம்பட்டினத்தின் 20℅ மக்களின் இறைச்சி தேவையை கடைத்தெரு பெரிய மீன் மார்கெட் மற்றும் கரையூர் தெருவில் உள்ள இறைச்சி கடைகள் நிவர்த்தி செய்து வருகின்றன.
இதுபோக அதிரையின் பிரதான தெருக்களிலும் ஒன்றிரண்டு ஆட்டு இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகிறது.
இந்திய உணவு பாதுக்காப்பு சட்ட விதிகளின் பிரகாரம் ஆடு , மாடு உள்ளிட்ட இறைச்சிகளை விற்பனை செய்வதற்கு முன்பு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் , மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்பட்டு எந்த நோய் பாதிப்பும் இல்லாத ஆடு மாடுகளை அறுத்து விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும்.
அவ்வாறு சான்றிதழ் பெறாத இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்யவும் , மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும் சட்டத்தில் இடமுண்டு.
ஆனால் அதிரையில் இதுபோன்ற நடைமுறையை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னரே நிறுத்தி விட்டனர்.
இதுகுறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படாமல் உள்ளதால் வீதிக்கு நான்கு இறைச்சி கடைகள் அவர்களின் சொந்த இடத்திலேயே வதைக்கூடம் என விதிமீறல்கள் காணப்படுகின்றது.
இதன் காரணமாக நோய்தொற்றுள்ள ஆடுகள், திருட்டு ஆடுகள், நாய்கடித்த ஆடுகள்,செத்த ஆடுகள் என மக்களின் சுகாதாரத்தை கெடுக்கும் வகையில் இறைச்சிகளை விற்பனை செய்யும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
எனவே அதிராம்பட்டினம் பேரூராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரிகள் பேரூராட்சி எல்லைகுட்பட்ட இறைச்சி கடைகளை கண்காணிப்பு செய்து ஆடுகளை ஒரே இடத்தில் வைத்து அறுக்கவும், நோய்த்தொற்று அற்ற ஆடுகள்தான் இறைச்சிக்காக அறுக்கப்படுகிறது என்பதை மக்களுக்கு தெளிவு படுத்தவேண்டிய பொறுப்பும் உள்ளது .
நுகர்வோரும் தனது சொந்த இடங்களில் வைத்து அறுக்கும் இறைச்சிகளை வாங்காமல் அவர்களுக்கு மேற்கண்ட விடயத்தை அறிவுரை கூறி தடையற்ற சான்றுகள் பெற்ற பின்னரே இறைச்சிகளை அவர்களிடமிருந்து கொள்முதல் செய்யவும் , மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறது.