தேசிய குடியுரிமை பதிப்பகம் (NRC) அஸ்ஸாமில் நேற்று தனது இரண்டாவது இறுதி வரைவை வெளியிட்டுள்ளது. இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபுபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வரைவு அறிக்கை நாட்டில் வாழும் குடிமக்களுக்கு மிகப்பெரிய அளவில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக எச்சரித்துள்ளார். பெங்காலி பேசும் அதிகப்படியான மக்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக மாற்றப்படும் துயரத்தை அரசு, நீதித்துறை, தேசிய அரசியல் கட்சிகள் மற்றும் மனிதஉரிமை அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்தவேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
40 லட்சம் மக்களுக்கும் மேலாக, பெரும்பாலும் பெங்காலி பேசும் அஸ்ஸாமிகள், NRC வெளியிட்டுள்ள இறுதி வரைவில் இருந்து நீக்கப்பட்டுள்ளது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலை நீடித்தால் அவர்கள் பிறந்த மண்ணிலேயே சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று அறிவிக்கப்படுவார்கள். குடியுரிமை, அரசியல் பிரதிநிதித்துவம் அவர்களுக்கு மறுக்கப்படுவதுடன், போலீஸ் மற்றும் ராணுவத்தால் நடத்தப்படும் மனித உரிமை மீறல்களுக்கு இரையாகவும் வாய்ப்புகள் உள்ளன .
அவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படவோ, முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படவோ மாட்டார்கள் என்ற மத்திய மாநில அரசுகளின் உத்தரவாதம் இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கான அறிகுறியாக தெரியவில்லை. ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 20 வரை ஒரு மாதத்திற்குள் அவர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபித்தால் மீண்டும் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது நகைப்புக்குரியது ஆகும். இவ்வளவு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் , குறுகிய காலத்தில் இதனை செய்து முடிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமற்றது.
மேலும் அலட்சியத்திற்கும், புறக்கணிப்புக்கும் ஆளாகியுள்ள, அடிக்கடி துயரங்களை சந்தித்து கொண்டிருக்கும் பெருமளவிலான வங்காளிகள் ஒரு நிலையான வாழ்க்கை கூட கிடைக்காமல் அன்றாடம் இடம் விட்டு இடம் பெயர்ந்து செல்லக்கூடியவர்களாக உள்ளனர். இப்படிப்பட்ட மக்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க எந்த ஒரு ஆவணங்களையும் தயார் செய்ய முடியாது.
பங்களாதேஷ் அரசோ, மேற்குவங்காள மாநிலமோ அஸ்ஸாமிலிருந்து இவர்களை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. வெளிநாட்டவர் என NRC அறிவித்துள்ள பாதி அளவு மக்களை கூட தங்க வைப்பதற்கு அகதிகள் முகாம்களோ, திறந்தவெளி சிறைச்சாலைகளோ போதுமானதாக இருக்காது.
ஆகவே இதன் பின்னாலுள்ள பாசிச, இனவாத சக்திகளின் சூழ்ச்சிகளை நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டும். வரவிருக்கும் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பெரும்பான்மையான முஸ்லிம் வங்காளிகளின் ஓட்டுஉரிமையை பறிப்பதற்காக, அவர்களின் குடியுரிமையை பறிக்கும் செயல்திட்டம்தான் இது.
தங்கள் குடியுரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள இந்த தருணத்தில், பாதிக்கப்பட்டுள்ள அஸ்ஸாம் மக்களுக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளார் பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தேசிய தலைவர் இ.அபுபக்கர்.
இப்படிக்கு
டாக்டர் முஹம்மது ஷம்மூன்,
மக்கள் தொடர்பு அதிகாரி,
தலைமையகம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.