திமுக செயல் தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் பழனிசாமியுடன் திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதியின் உடல்நலம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று விசாரித்து செல்கின்றனர். இதற்கிடையே கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை முதலே திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் சற்றே பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
பின்னர் மாலை 6.30 மணியளவில் கருணாநிதியின் உடல்நிலைக் குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கை திமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து காவேரி மருத்துவமனை வெளியே தொண்டர்கள் குவியத் தொடங்கினர். தொண்டர்களை கட்டுப்படுத்த போலீசாரும் தங்களது பாதுகாப்பை பலப்படுத்தினர். அத்துடன் சென்னை முழுவதும் முக்கிய இடங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்திற்கு திடீரென மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார். இவரும் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். மு.க.அழகிரி, கனிமொழி, முரசொலி செல்வம், டி.ஆர்.பாலு, ஐ. பெரியசாமி உள்ளிட்டோரும் ஸ்டாலினுடன் வருகை தந்துள்ளனர்.