Home » 90ஐ நோக்கி பெட்ரோல்.. 80ஐ நோக்கி டீசல்… கடும் விலையேற்றத்தால் அதிருப்தியில் பொதுமக்கள் !

90ஐ நோக்கி பெட்ரோல்.. 80ஐ நோக்கி டீசல்… கடும் விலையேற்றத்தால் அதிருப்தியில் பொதுமக்கள் !

0 comment

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருகிறது. இன்றும் கூட பெட்ரோலின் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.83.66 ஆகவும் டீசலின் விலை லிட்டருக்கு 11 காசுகள் உயர்ந்து ரூ.76.75 ஆகவும் விற்கப்படுகிறது.

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மாதம் இருமுறை மட்டுமே மாற்றப்பட்டு வந்தநிலையில் , கடந்த ஆண்டு மே மாதம் முதல் தினமும் விலையை மாற்றிக்கொள்ளலாம் என மத்திய பாஜக அரசு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவு கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால், எரிபொருள்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

எரிபொருள்களின் விலையை குறைக்கும் வகையில் கலால் வரியை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் , வருவாய் இழப்பை குறிப்பிட்டு , கலால் வரியை குறைக்க மத்திய அரசு மறுத்து வருகிறது.

இதனிடையே , பெட்ரோல்-டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாளை மறுநாள் திங்கிட்கிழமை நாடு தழுவிய பந்த் நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

எரிபொருள்களின் விலையில் பாதி அளவு மத்திய , மாநில அரசுகள் விதிக்கும் வரிகள்தான் உள்ளன. ஒரு லிட்டர் பெட்ரோல் மீது கலால் வரியாக மத்திய அரசு ரூ.19.48 விதிக்கிறது. இந்த வரி டீசல் மீது ரூ.15.33 ஆக உள்ளது. இது தவிர மாநில அரசுகள் மதிப்புக் கூட்டு வரியை (வாட்) விதிக்கின்றன.

கடந்த 2014 இறுதியில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மிகவும் குறைந்தது. அப்போது முதல் 2016ஆம் ஆண்டு ஜனவரி வரையிலான காலகட்டத்தில் 9 தவணைகளாக பெட்ரோல் மீதான கலால் வரியை ரூ.11.77-ம், டீசல் மீதான கலால் வரியை ரூ.13.47-ம் மத்திய அரசு அதிகரித்தது.

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டு வருவது பொதுமக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பெட்ரோல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter