Home » உள்ளாட்சித் துறையில் மிகப்பெரிய ஊழல்… அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு !

உள்ளாட்சித் துறையில் மிகப்பெரிய ஊழல்… அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு !

0 comment

அமைச்சர் எஸ்.பி வேலுமணி , தன் உறவினர்களுக்கு அரசு ஒப்பந்தங்களை வழங்கி பெரும் ஊழல் செய்திருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட ஆவணங்களையும் அந்த இயக்கம் நேற்று வெளியிட்டது.

தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊழல் செய்திருப்பதாகவும் அதைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அம்பலப்படுத்துவதாகவும் முன்னதாக அறபோர் இயக்கம் கூறியிருந்தது.

அதன்படி நேற்று மாலை சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய அறபோர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், “ தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், அமைச்சர் வேலுமணி ஊழல் செய்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. சென்னை, கோவை போன்ற மாநகராட்சிகளில் வேலுமணியின் பினாமி நிறுவனங்களுக்குப் பெரும்பாலான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

குறிப்பாக அமைச்சரின் சகோதரர்கள் மற்றும் உறவினர்களின் நிறுவனங்களான கே.சி.பி இன்ஜினீயர்ஸ் லிமிடெட் மற்றும் பி.செந்தில் அண்ட் கோ, வரதன் இன்ஃபராஸ்ரக்சர்ஸ், கன்ஸ்ட்ரானிக்கஸ் இந்தியா, ஆலயம் பவுண்டேஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சுமார் 700 கோடி வரை இந்த ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. அமைச்சரின் சகோதரரான அன்பரசன், உறவினர்கள் சந்திரசேகர், சந்திர பிரகாஷ், சுந்தரி, ராபர்ட் ராஜா போன்றவர்களுக்கு ஒப்பந்தம் சென்றுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் எடுக்கும்வரை லட்சத்தில் இருந்த நிறுவனங்களின் வருவாய், பிறகு கோடிகளில் புரளத் தொடங்கியுள்ளன. முக்கியமாக 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளிலேயே அதிக ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. பெரிய அளவிலான ஒப்பந்தங்கள் அமைச்சரின் நெருங்கியவர்களுக்கும் சிறிய அளவிலான ஒப்பந்தங்கள் பிற நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன” எனக் கூறினார்.

மேலும், “தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் கிடைத்த அனைத்துத் தகவல்களையும் இணைத்து எங்கள் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது’’ என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் ஊழல் புகார் கூறியுள்ளார். மேலும் இந்த ஊழல் விவகாரத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதவி விலக வேண்டும் எனவும் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter