54
பிலிப்பைன்ஸ் நாட்டில் மங்குட் என்ற புயல் நேற்று(15/09/2018) கடுமையாக தாக்கியது. மணிக்கு 200 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால் சாலையில் உள்ள மரங்கள் வேரோடு பெயர்ந்தது. வீடுகளின் கதவுகள் ஜன்னல்கள் உடைந்தது. மின்சாரம் தடைபட்டதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மங்குட் புயலால் ககபான், வடக்கு இசபெல்லா, அபயாவோ மற்றும் அபாரா மாகாணங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. மின் கம்பங்கள் சாலையில் விழுந்துள்ளது. அதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
புயல் ஏற்படுத்திய பாதிப்புகளில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலரை காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
புயல் காரணமாக பிலிப்பைன்சில் கடல் மற்றும் வான்வழி மார்க்க பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளது .
இந்த புயல் கரையை கடந்த நிலையில் இன்று மாலை ஹாங்காங் பகுதியில் நுழையும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கு முன்பு 2013-ம் ஆண்டில் ‘கையான்’ என்ற புயல் பிலிப்பைன்ஸை தாக்கியதில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.