தற்போது இந்தியா முழுக்க பல இடங்களில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்து வருகிறது. பொதுவாக தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் அமைதியாக நடந்து முடிவதே வழக்கம்.
ஆனால் இந்த முறை திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் சில இடங்களில் இந்து முன்னணியினர் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் மேடை அமைக்க பாஜக அனுமதி கேட்டு இருக்கிறது. மேடை அமைக்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் மேடை அமைப்பது சரியாக இருக்காது என்று போலீஸ் மறுத்துள்ளது. இது கலவரத்திற்கு வழிவகுக்கும் என்று போலீஸ் அந்த இடத்திற்கு அனுமதி அளிக்க மறுத்துள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார். மேடை அமைக்க அனுமதி மறுக்கப்பட்டதால் எச்.ராஜா கோபமாக போலீசுடன் வாக்குவாதம் செய்தார். போலீசையும் நீதிமன்றத்தையும் கொச்சையான வார்த்தைகளில் திட்டினார்.
காவல்துறையினர், டிஜிபி, சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவற்றை நடுத் தெருவில் நின்று படு அசிங்கமாக விமர்சித்துப் பேசினார் எச். ராஜா.
காவல்துறையினரையும், டிஜிபியையும் படு மோசமாக விமர்சித்து எச். ராஜா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை விட மோசமாக உயர்நீதிமன்றத்தைப் பார்த்து சொல்லக் கூடாத, தகாத வார்த்தையால் விமரா்சித்துள்ளார் எச். ராஜா. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வரலாற்றில் இதுவரை யாருமே இப்படி நடுத் தெருவில் நின்று கொண்டு உயர்நீதிமன்றத்தை விமர்சித்ததில்லை. ஒரு தேசிய கட்சியின் செயலாளராக இருப்பவர் போலீஸையும் , உயர்நீதிமன்றத்தையும் இவ்வளவு கீழ்த்தரமாக விமர்சித்து பேசியிருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் உயர்நீதிமன்றம் எச். ராஜா மீது தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.