புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் எச்.ராஜா. டிஜிபி, போலீஸார், உயர்நீதிமன்றம் ஆகியோரை மிகவும் அவதூறாகப் பேசினார்.
இந்த நிலையில் திருமயம் காவல் நிலையத்தில் எச். ராஜா மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக பெறப்பட்ட புகாரின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் எச் ராஜாவுக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகிறது. எச்.ராஜாவை கைது செய்ய இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படையும், இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படையும் புறப்பட்டுள்ளது.
இன்று காலையில் மன்னார்குடியில் இருந்த எச் ராஜாவின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. எனவே தாம் கைது செய்யப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. எனினும் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சிவகங்கையில் உள்ள அவரது வீட்டை சுற்றி போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே பெண் நிருபர்களை அவதூறாக பேசிய எஸ்வி சேகரை போல் எச் ராஜாவும் தலைமறைவாக இருந்தவாறே முன்ஜாமீன் கோர வாய்ப்புள்ளது. அவர் கைது செய்யப்படுவாரா அல்லது முன்ஜாமீன் பெறுவாரா என்பது இனிமேல் தான் தெரியவரும்.