உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் விண்வெளி கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியினை ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான சதீஷ் தவான் விண்வெளி மையம் (SDSC) SHAR நடத்துகின்றது. இந்த கண்காட்சியினை தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் டாக்டர் எஸ்.டி.எஸ். செல்வம் தலைமை தாங்க, ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ பொதுமேலாளர் வி. கும்பகர்ணன் முன்னிலை வகிக்க, மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி, சென்னை துறைத்தலைவர் டாக்டர் வி. சுந்தர், பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் வீ. முத்துவேலு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த உலக விண்வெளி வார கண்காட்சியில், விஞ்ஞானிகள் விண்வெளி விழிப்புணர்வு கருத்தரங்குகள், மாணவர்கள் விஞ்ஞானிகள் கலந்துரையாடல், விண்வெளி வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு, விண்வெளி குறித்த உயர்கல்விக்கான விழிப்புணர்வு, விண்வெளி குறித்த குறும்படம் ஒளிபரப்பு ஆகியன இன்று, நாளை,நாளை மறுநாள் என மூன்று நாட்கள் நடைபெறுகின்றது.
இத்துடன் பள்ளி, கல்லூரிக்கான விண்வெளி கண்காட்சி மாதிரிப் போட்டி மற்றும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, வினாடி வினா போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி ஆகிய போட்டிகளும் நடைபெறுகின்றது.
நாளை செவ்வாய்கிழமை விண்வெளி விழுப்புணர்வு பேரணி பட்டுக்கோட்டை அண்ணாசிலையில் தொடங்கி பேருந்து நிலையம் வரை நடைபெற உள்ளது. இப்பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். செந்தில்குமார் தொடங்கி வைக்கிறார்.