Home » மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி – டிரான்ஸ்பார்மரிலேயே பிணமாக தொங்கிய பரிதாபம்.!!

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி – டிரான்ஸ்பார்மரிலேயே பிணமாக தொங்கிய பரிதாபம்.!!

0 comment

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள செருவாவிடுதி தெற்கு ஊராட்சி கூழையன் தெருவை சேர்ந்தவர் ரவிசங்கர்(வயது 38). எலக்ட்ரீசியனான இவர், ஊராட்சியின் தெருவிளக்குகளை பழுது நீக்கும் பணியினை செய்து வந்தார்.

இந்த நிலையில் அங்கு உள்ள ஒரு டிரான்ஸ்பார்மர் பழுதடைந்து 20 நாட்களுக்கு மேலாகி விட்டதாக தெரிகிறது. இதுகுறித்து திருச்சிற்றம்பலம் மின்வாரிய அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், பழுதடைந்த டிரான்ஸ்பார்மருக்கு மின் இணைப்பு மட்டும் துண்டிக்கப்பட்டு இருந்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் அந்த பகுதியில் பழுது நீக்கிய தெருவிளக்குகளை எரிய விடுவதற்காக நேற்று காலை ரவிசங்கர் பழுதடைந்து இருந்த டிரான்ஸ்பார்மரில் ஏறினார். அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் ரவிசங்கர், டிரான்ஸ்பார்மரிலேயே பிணமாக தொங்கினார்.

இந்த சம்பவம் நடந்து 2 மணி நேரத்திற்கு மேலாகியும் மின்வாரிய அதிகாரிகளோ, காவல் துறையினரோ சம்பவ இடத்திற்கு வரவில்லை. இதனை கண்டித்து செருவாவிடுதி அரசு ஆரம்ப சகாதார நிலையம் அருகில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் குறித்த தகவல் அறிந்த பின்னரே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அங்கு வந்த திருச்சிற்றம்பலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள், பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை அதிகாரிகள் சரி செய்யவில்லை என்றும், அதன் மின் இணைப்பை மட்டும் துண்டித்து வைத்து இருந்ததாகவும், இந்த நிலையில் மின்வாரிய பணியாளர்கள் அந்த டிரான்ஸ்பார்மரில் நேரிடையாக மின் இணைப்பை வழங்கி இருந்ததாகவும், இதுகுறித்து எந்தவித முன் அறிவிப்பும் செய்யாததாலேயே ரவிசங்கர் மின்சாரம் தாக்கி இறந்ததாகவும் குற்றம் சாட்டினர்.

இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், எனவே போராட்டத்தை கைவிடுமாறும் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தை விலக்கிக்கொண்டனர். இந்த மறியல் போராட்டம் திருச்சிற்றம்பலம்-பட்டுக்கோட்டை, அறந்தாங்கி-புதுக்கோட்டை இருவழித்தடத்திலும் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையினர் ரவிசங்கரின் உடலை டிரான்ஸ்பார்மரில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source:-Daily_thanthi

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter