Home » Breaking News : 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும்-ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு…தப்பியது அதிமுக ஆட்சி !

Breaking News : 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும்-ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு…தப்பியது அதிமுக ஆட்சி !

0 comment

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை எனக் கூறி டிடிவி தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் மனு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் சட்டசபை சபாநாயகர் தனபாலிடம் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில், 19 எம்எல்ஏக்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். இதில், ஜக்கையன் மட்டும் சபாநாயகர் முன்பாக ஆஜராகி விளக்கம் அளித்தார். மற்றவர்கள் ஆஜராகவில்லை என்பதால், அவர்களை கட்சி தாவல் தடைச் சட்டத்தின்கீழ், தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதையடுத்து, சபாநாயகர் உத்தரவை எதிர்த்து, 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2017, செப்டம்பர் 18ம் தேதி வழக்குத் தொடுத்தனர். கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் எங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. எங்களைத் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தங்கள் மனுவில் கோரிக்கை விடுத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி எம்.துரைசாமி, ஹைகோர்ட் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகள் காலியாக இருப்பதாகவோ, அந்தத் தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிப்போ வெளியிடக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தார். இதன்பிறகு, வழக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது.

அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததும், வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு ஜனவரி 23ம் தேதி ஒத்திவைத்தது. ஜூன் 14ம் தேதி தீர்ப்பு வெளியானது. தினகரன் ஆதரவாளர்கள் 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று, 18 தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடத்தலாம் என்றும் இந்திரா பானர்ஜி தீர்ப்பளித்தார். ஆனால், அதே சமயம், 18 எம்எல்ஏக்களையும், தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று மற்றொரு நீதிபதி சுந்தர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.

இரண்டு நீதிபதிகளும் இருவேறு மாறுபட்ட தீர்ப்பினை அளித்ததால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்படுவதாகவும், 3வது நீதிபதியின் தீர்ப்பு வரும் வரை 18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு நீடிக்கும் என்றும் இந்திரா பானர்ஜி அறிவித்தார். நீதிபதியை நியமிக்கும் பொறுப்பு, சீனியர் நீதிபதியாக இருந்த (இப்போதைய தலைமை நீதிபதி) குலுவாடி ரமேஷுக்கு வழங்கப்பட்டது. மூன்றாவது நீதிபதியாக சத்யநாராயணன் நியமிக்கப்பட்டார்.

முன்பு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்களான, மோகன் பராசரன், பி.எஸ்.ராமன் ஆகியோரும், சபாநாயகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம், முதல்வர் தரப்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், அரசு தலைமை கொறடா தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோதஹ்கி ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சத்யநாராயணன் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி அன்று வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இந்நிலையில்தான் வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வெளியானது.

இதையடுத்து நீதிபதி சத்யநாராயணன், காலை 10.15 மணிக்கெல்லாம் நீதிமன்றம் வந்தடைந்தார். அவருக்கு பாதுகாவல் அதிகரிக்கப்பட்டிருந்தது. நீதிபதி தனது தீீர்ப்பில், சபாநாயகர் முடிவு சரியானதுதான் என்றும், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்றம் தீர்ப்பு வழங்கினார். இதனால் அரசு ஆபத்திலிருந்து தப்பியது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter