தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் ஆவணம் பெரியநாயகிபுரம் சின்னக்குளத்தை தங்களது சொந்த முயற்சியில் தூர் வாரும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆவணம் பெரியநாயகிபுரம் சின்னக்குளம் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தூர் வாரப்படாமல், பாசி படர்ந்தும், சேறும், சகதியுமாக இருந்தது. இதனால் கடும் துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இதனால் இப்பகுதி சுகாதாரம் பாதிக்கப்பட்டு, கொசுக்கடி பிரச்சினையும் தலைதூக்கத் தொடங்கியது.
இக்குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்தி தண்ணீர் நிரப்பித் தருமாறு இப்பகுதி இளைஞர்கள் ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் பல்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும் தீர்வு காணப்படவில்லை. இதையடுத்து குளத்தை தாங்களாகவே தூர்வாரி சுத்தம் செய்ய முடிவெடுத்தனர்.
இதையடுத்து இளைஞர்களின் தலைமையில் முக்கியப் பிரமுகர்கள், கிராமத்தினரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு, பேராவூரணி பேரூராட்சி பெருந்தலைவர் என்.அசோக்குமார் உள்ளிட்ட பலர் நிதியுதவி அளித்தனர்.
இந்த நிதியுதவித் தொகை மற்றும் கிராமத்தினர் பங்களிப்புடன் சின்னக்குளத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் தூர் வாரும் பணி கடந்த 9 தினங்களாக நடைபெற்று வருகிறது. இளைஞர்களின் இந்த செயலுக்கு இப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.