தேனியில் அமைய இருக்கும் நியூட்ரினோ திட்டம் கடும் எதிர்ப்புகளை சந்தித்து இருக்கிறது. மிகவும் ஆபத்தான முறையில் செய்யப்படும் இந்த ஆய்வுக்கு தமிழகம் முழுக்க எதிர்ப்பு உருவாகி உள்ளது.
ஆனால் மத்திய அரசு எப்படியாவது இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று உறுதியாக இருக்கிறது. இதனால் மக்களிடம் இருந்து சில சமயம் முறைகேடாக நிலம் வாங்க கூட முடிவெடுத்தது.
இந்த நிலையில்தான் சில வாரங்களுக்கு முன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இதனால் நியூட்ரினோ பணிகள் தீவிரமடைய தொடங்கியது.
இந்த நிலையில் பூவுலகின் நண்பர்கள் இந்த சுற்றுசூழல் அனுமதிக்கு எதிராக வழக்கு தொடுத்தனர். பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜன் இதற்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தார்.
அவர் தொடுத்த வழக்கில் இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க இடைக்கால தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேசிய வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சகத்திடம் நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி வாங்க வேண்டும், வனவிலங்கு பாதிக்குமா என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதேசமயம் தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க சுற்றுசூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதிக்கு இப்போது தடை விதிக்க முடியாது என்றும் கூறியுள்ளது. மத்திய அரசின் சுற்றுசுழல் அனுமதியில் தலையிட முடியாது என்று கூறியுள்ளது.
வழக்கு விசாரணை முடியும் வரை இந்த திட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க கூடாது என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றம் செல்ல பூவுலகின் நண்பர்கள் அமைப்பு முடிவெடுத்துள்ளது.