தீபாவளிப் பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகள் 6 இடங்களில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
தீபாவளிக்காக நவம்பர் 3,4,5 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல பொதுமக்களின் வசதிக்காக ஏராளமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
சிறப்பு பேருந்துகளின் இயக்கம் மற்றும் புறப்பாடு குறித்த முழு தகவல் : எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் கோயம்பேட்டில் இருந்து அனைத்து இருக்கைகள் பூர்த்தியான பேருந்துகள் தாம்பரம், பெருங்களத்தூர் செல்லாமல் மதுரவாயல், பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை வெளிசுற்றுச் சாலை வழியாக வண்டலூர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகள் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் ஏறுவதற்கு பதிலாக மாற்றி அமைக்கப்பட்டுள்ள ஊரப்பாக்கம் – கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்தில் இருந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி ஆந்திரா செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் புறப்பட உள்ளன.
விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சை செல்லும் பேருந்துகள் தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.
திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், ஓசூர் செல்லும் பேருந்துகள் புறப்பட உள்ளன.
மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.