இன்று புறம் பேசுவது மனிதர்களிடையே ஒரு பொழுது போக்கு போல் ஆகிவிட்டது. இது இம்மை மறுமை இரண்டிலும் மனிதனை நாசமாக்கிவிடும். ஆனால் அதை அவர்கள் உணர்வதே இல்லை. புறும் என்பது ஒருவருடைய குறையை அவருக்குப் பின்னால் பேசுவதாகும். இச்செயலை இஸ்லாம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. இருந்தபோதும் புறம் பேசாத மக்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். காரணம் அக்குற்றத்தின் கடுமையை மக்கள் சரியாக உணரவில்லை.
கொலை, களவு, விபச்சாரம், மது அருந்துவது போன்றவை தீய நடத்தை என்பதை ஏற்றுக் கொள்ளும் மனிதன்; புறம் பேசுவதை சாதாரணமான குற்றமாக நினைக்கின்றானோ என்னவோ அதைப்பற்றி கவலையே படாதவனாக காலம் தள்ளிக் கொண்டிருக்கிறான். அதிலும் சிலருக்கு மற்றவர்களை குறை சொல்லாவிட்டால் தூக்கமே வராது என்றுகூட சொல்லலாம். மற்றவர்களைப்பற்றி எதையேனும் அவிழ்த்து விடவேண்டுமே! இல்லையென்றால் உண்ட உணவு செரிக்காதே என்கின்ற ரகமும் உண்டு.
0 புறம் பேசுவது விபச்சாரத்தைவிடக் கொடியது என்கிறார்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். விபச்சாரம் ஒரு மோசமான குற்றம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் புறம் கூறுவது அதைவிட கொடிய பாவம் என்பதை மனிதன் உணர்கிறானா என்றால் இல்லையென்னு தான் சொல்ல வெண்டும். ஏனெனில் உணர்ச்சியின் உந்துதலால் விபச்சாரம் செய்பவன்கூட அதை மறைவாகத்தான் செய்கிறான். ஆனால் அதைவிடக் கொடிய பாவமென இஸ்லாம் கூறும் புறம்பேசுதல் பகிரங்கமாகவே இடம், பொருள், ஏவல், என்று எந்த வரைமுறையுமில்லாமல் எல்லா இடங்களிலும், நேரங்களிலும் எவ்வித பயமுமின்றி வீறு நடை போடுகிறது. இந்த வீறு நடை காட்டும் பாதை நரகம் என்பதை எத்தனை பேர் உணர்வார்கள்?
0 புறம் பேசுபவர்கள் மறுமை நாளில் கடுமையான வேதனை செய்யப்படுவார்கள் தமது கரங்களினாலே அவர்கள் வேதனை செய்யப்படுவார்கள் என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
புறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர் என்பதை அறிது கொள்வோம். மரணித்த பிறகு கப்ரிலும், மறுமையிலும் மிகக் கொடிய தண்டனைகளைப் பெற்றுத் தரும் மிக மிக தீய செயலான புறம் பேசுவதை விட்டும் முஃமினான ஒருவர் அவசியம் தவிர்த்திருக்க வேண்டும்.