இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும் , இந்தியாவின் முதல் கல்வி அமைச்சருமான மெளலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்த நாள்தான் தேசிய கல்வி நாளாக கொண்டாடப்படுகிறது.
தனக்கென சிறப்பு வரலாற்றைக் கொண்டவர் மெளலான அபுல்கலாம் ஆசாத். மதரீதியாக பாகிஸ்தான் பிரிவினையை எதிர்த்து நின்று, சவாலான காலகட்டத்தில் இந்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்று, நாட்டின் கல்வி மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்.
இந்தியா சுதந்திரம் அடைந்த 1947ம் ஆண்டு முதல், தான் மறையும் 1958ம் ஆண்டு வரை கல்வி அமைச்சராக பணிபுரிந்தார். சுதந்திரம் பெற்ற இந்தியாவின் கல்வித் தேவைகளை சரியான முறையில் நிறைவுசெய்ய உறுதிபூண்ட இவர், அதற்கான அடித்தளத்தை அமைத்தார். இந்திய தொழில்நுட்ப கழகத்தை(IIT) அமைத்ததும், பல்கலைக்கழக மானியக் குழு(UGC) என்ற அமைப்பிற்கு அடித்தளமிட்டதும் இவரது பெரும் சாதனைகளில் சில.
இவரது சாதனைகளை நினைவுகூர்ந்து, நன்றி தெரிவிக்கும் விதமாகத்தான், இவரது பிறந்த நாளான நவம்பர் 11ம் தேதி, தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்தியாவை கல்வியில் முன்னேறிய நாடாக மாற்ற வேண்டும் என்று அபுல்கலாம் ஆசாத் கண்ட கனவு இன்று நிறைவேறி விட்டதா? என்றால், இல்லை, என்றே சொல்லலாம். அடிப்படை கல்வியை ஒவ்வொரு குடிமகனும் பெற வேண்டும் என்ற நிலைக்கே நாம் வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது. “அடிப்படை கல்வி உரிமைச் சட்டம்” என்றெல்லாம் பலவித சட்டங்களை இயற்ற வேண்டியுள்ளது.
பாரபட்சமற்ற கல்விக்கு “சமச்சீர் கல்வி” என்ற திட்டமெல்லாம் கொண்டுவர வேண்டியுள்ளது. அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளின் தரம் சொல்ல முடியாத அளவில் மிகவும் மோசமாக உள்ளது. அரசு நியமிக்கும் ஆசிரியர்களின் தரமோ, அதைவிட மோசமாக உள்ளது. கல்வியில் வியாபாரிகள் புகுந்து, பெரும் கொள்ளையடிக்க ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. நாட்டின் லாபம் கொழிக்கும் தொழில்களில் ஒன்றாக கல்வித் தொழில் பரிமாணம் பெற்றுள்ளது.
“தேசிய கல்வி நாள்” என்று ஒரு தினம் அனுசரிக்கப்படுகிறது என்றே பலருக்கும் தெரிவதில்லை. எத்தனை ஆசிரியர்களுக்கு இந்த தினம் பற்றி தெரிந்திருக்கிறது என்று கேட்டால், நிலைமை மோசமாகிவிடும். அந்தளவில்தான் நமது சமூகம் இருக்கிறது.
சமூக ஏற்றத்தாழ்வு, வியாபார நோக்கம், அதிகார வர்க்கங்களின் அலட்சியம், மக்களின் தெளிவின்மை, வறுமை, கிராமப்புற பின்னடைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள், கல்வி வளர்ச்சியில் இந்தியாவை வளர்ச்சியடையாத ஒரு நாடாகவே வைத்துள்ளன. “இந்தியா கல்வி வல்லரசாக உருவாகி வருகிறது” என்ற போலியான புள்ளி விபரங்களைக் கொடுத்து, அதன்மூலம் பொய்ப்பிரச்சாரத்தை மேற்கொள்வது அரசுகளின் வாடிக்கையாகிவிட்டது. அவர்கள் சொல்லும் வளர்ச்சி, ஒரு குறிப்பிட்ட சதவிகித மக்களுக்கானதே தவிர, ஒட்டுமொத்த மக்களுக்கானதல்ல.
எனவே, கல்வியில் ஒட்டுமொத்த இந்திய சமூகமும் முன்னேற, நம்மிடையே, குறிப்பாக மாணவ சமூகத்தினரிடையே விழிப்புணர்வு வேண்டும். தேசிய கல்வி தினமான இன்று, அதற்கான வழிமுறைகள் பற்றி ஆராய வேண்டியது நம் அனைவரின் கடமை !