Home » முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவு தினம்..!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவு தினம்..!!

0 comment

தனித்துவம் மிக்க தலைவராக துணிச்சலுடன் செயல்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2ஆம் ஆண்டு நினைவு தினம்…

ஆறு முறை தமிழக முதலமைச்சர், 29 ஆண்டுகள் கட்சியின் பொதுச்செயலாளர், 17 ஆண்டுகள் திரையுலகில் கோலோச்சிய நடிகை… இப்படி எத்தனையோ சிறப்புகளைப் பெற்ற ஜெயலலிதா மறைந்து இன்றுடன் இரண்டாண்டுகள் கடந்துவிட்டன.

அம்மா…! லட்சக்கணக்கான தொண்டர்கள் உச்சரித்த மந்திரச் சொல் இது… புன்னகை பூத்த முகத்துடன் அவர் கையசைக்கும்போது ஆரவாரம் விண்ணைப் பிளக்கும். இப்படிப்பட்ட புகழுக்குச் சொந்தக்காரர்தான் ஜெயலலிதா!

சிறு வயதிலேயே அறிவாற்றல், நினைவாற்றலுடன் விளங்கிய அவர், பத்தாம் வகுப்பில் மாநில அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றார். குழந்தைப் பருவத்திலேயே பரதநாட்டியம், கர்நாடக இசை பயின்ற ஜெயலலிதா, குடும்ப சூழல் காரணமாக படிப்பை பாதியிலேயே நிறுத்த நேரிட்டது. அதன்பின்னர் திரைத்துறைக்கு வந்த அவர்,17 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்தார்.

எம்.ஜி.ஆருடன் மட்டும் 28 படங்களில் இணைந்து நடித்தார் ஜெயலலிதா. இதில் பெரும்பாலானவை வெற்றிப் படங்களாகவும், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றவைகளாகவும் இருந்தன.

சிவாஜி, எஸ்.எஸ்.ஆர்., ஜெய்சங்கர், முத்துராமன், என்.டி.ஆர்., நாகேஸ்வரராவ், தர்மேந்திரா போன்ற முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார் ஜெயலலிதா.

தமிழ், கன்னடம், இந்தி என 127 படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்வந்த அவர், ஏழு மொழிகளில் பேசத் தெரிந்தவர். தனது இனிய குரலால் திரைப்படப் பாடல்களையும் பாடியுள்ளார்.

எம்.ஜி.ஆரின் வழிகாட்டுதலை ஏற்று, 1980ல் அ.தி.மு.க.வில் இணைந்த ஜெயலலிதா, கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். சத்துணவுத்திட்ட உயர்மட்டக் குழுவின் உறுப்பினராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் அவர் பதவி வகித்தார்.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின் அ.தி.மு.க. பிளவுபட்டபோது, 1989ல் சேவல் சின்னத்தில் அவரது அணி வெற்றிபெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. பின்னர் அ.தி.மு.க. மீண்டும் ஒருங்கிணைந்து, ஜெயலலிதா கட்சியின் பொதுச்செயலாளரானார்.

1991 சட்டப்பேரவைத் தேர்தலில் 225 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். 2001, 2011, 2016 சட்டமன்றத் தேர்தல்களிலும் வென்ற அவர், நீண்ட காலம் பதவி வகித்த பெண் முதலமைச்சராக திகழ்ந்தார்.

அவரது ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட முன்னோடித் திட்டங்களான தொட்டில் குழந்தை திட்டம், மழைநீர் சேமிப்புத் திட்டம், ரேஷனில் இலவச அரிசி, அம்மா உணவகம், மகளிர் காவல் நிலையம், இலவச லேப்டாப் திட்டம் போன்றவற்றை பிறமாநிலங்கள் பின்பற்றி செயல்படுத்தி வருகின்றன.

எதிர்க்கட்சியாக இருந்தபோதும் வலிமை மிக்க தலைவராகவே ஜெயலலிதா விளங்கினார். அகில இந்தியத் தலைவர்கள் பலரும், பல்வேறு பிரச்சனைகளில் ஆதரவு கோரியும், ஆலோசனை பெறவும் போயஸ்கார்டனுக்கு வந்து சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர், இதே நாளில் இவ்வுலகை விட்டு மறைந்தார். லட்சக்கணக்கான தொண்டர்கள் அவரது பிரிவைத் தாங்க முடியாமல் கண்ணீர்க் கடலில் மிதந்தனர்.

அரசியலில் பெண்களால் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்தவர் ஜெயலலிதா. துணிச்சலான பெண்மணி என்று அகில இந்திய அளவில் பேசப்படும் தலைவராகத் திகழ்ந்தார். ஜெயலலிதா அறிமுகப்படுத்திய திட்டங்கள் எத்தனையோ லட்சம் பேருக்கு வாழ்வளித்துள்ளன. அவரால் பயன்பெற்ற ஏழை-எளிய மக்கள் என்றென்றும் அவரது நினைவைப் போற்றுவார்கள் என்பதில் ஐயமில்லை…

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter