அதிரையில் கடந்த மாதம் 15ஆம் தேதி நள்ளிரவில் கஜா புயல் வீசியது. புயலின்போது அதிரையில் 111 கீ.மி வேகத்தில் காற்று வீசியது. மேலும் பலத்த மழையும் பெய்தது. இதனால் மரங்கள், மின்கம்பிகள் சேதமடைந்தன. கூரை வீடுகளும் பலத்த சேதத்தை சந்தித்தன.
அப்போது பெய்த கனமழையின் காரணமாக அதிரை கடற்கரைத்தெருவில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. அப்போது அதிரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தற்காலிக வடிகால் வெட்டப்பட்டு, மழைநீர் முழுவதும் ஓடுவதற்கு வழிவகை செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது மீண்டும் பெய்த மழையால் அதே இடத்தில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் மழைநீரால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவவும் வாய்ப்புள்ளது.
எனவே அதிரை பேரூராட்சி நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி நோய் பரவுவதற்கு முன் அந்த மழைநீர் ஓடுவதற்கு நிரந்தர வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.