18 வயது கீழ் உள்ளவர்கள் மெரினாவில் குளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், மெரினா கடற்கரையில் தங்களது பிள்ளைகளை தடையை மீறி குளிக்க அனுமதிக்கும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சிறுவர்களை கடற்கரை அழைத்து வரும் போது பெற்றோர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தாம்பரம் சேலையூர் நகராட்சி பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களான தாம்பரத்தை சேர்ந்த வினோத் (14), சதீஷ் குமார் (14) மற்றும் கிண்டியை சேர்ந்த செந்தில் குமார் (14) ஆகிய 3 பேர் நேற்று கடல் அலையில் சிக்கி மாயமாகினர்.
இதனையடுத்து, ஹெலிகாப்டர் மூலமும், கடலோர காவல் படை போலீசாரும், தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எச்சரிக்கை பலகை கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள போதிலும், பலர் எச்சரிக்கையை மீறி ஆபத்தான பகுதியில் குளிப்பதால் உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருவதாக கூறப்படுகிறது.
2017 – 18 – ல் மட்டும், 15 வயதிலிருந்து 30 வயதிற்கு உட்பட்ட, 20 பேர் மெரினா கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு, இதுவரை கிடைக்கவில்லை என, போலீஸ் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அதே நேரம், தொடர்ந்து, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், 18 வயது கீழ் உள்ளவர்கள் மெரினாவில் குளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், மெரினா கடற்கரையில் தங்களது பிள்ளைகளை தடையை மீறி குளிக்க அனுமதிக்கும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.