Home » NGO க்கள் என்னும் நல்ல பாம்புகள்..!! எச்சரிக்கை..!!

NGO க்கள் என்னும் நல்ல பாம்புகள்..!! எச்சரிக்கை..!!

0 comment

 

தூத்துக்குடி மக்கள் எப்படி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடுகிறார்களோ அதே போல், நாகை, காரைக்கால் மக்கள் ONGC நிறுவனத்திற்கு எதிராக போராடி வருகின்றனர். அதனால், அப்பகுதியில் விவசாயம் அழிந்து மக்கள் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இந்த சூழலில் ONGC நிறுவனம் மக்களை ஏமாற்றி நன்மதிப்பை பெறுவதற்காக ஸ்டெர்லைட் பாணியில் சில சின்ன மீன்களை போட்டு பெரிய மீன்களை பிடிக்க (அதாவது சிறிய உதவிகளை செய்து பெரும் லாபம் அடைய) முன் வந்துள்ளது. இதனை பார்த்த மக்களும் போராட்டத்தை கைவிட்டுவிடுவார்கள் என்ற கார்ப்பரேட் தந்திரத்தை அவர்கள் கையாள்கின்றனர்.

இதற்கு உறுதுணையாக இருப்பது ரோட்டரி சங்கம் எனப்படும் மற்றுமொரு கார்ப்பரேட் NGO தான். ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பணி என்பது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் திட்டங்களை எதிர்ப்பதும், அதனை வரவிடாமல் தடுப்பதும் தான். ஆனால், ரோட்டரி சங்கம் என்ற இந்த NGO, ONGC க்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுக்க முயற்சித்து வருகிறது.

இதுபோல் தான் ரெட் கிராஸ், லயன்ஸ் சங்கம் போன்றவையும் பன்னாட்டு நிதி, கார்ப்பரேட் நிதியுதவி, அரசு ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகின்றன. ஊருக்குள் நிலவும் மக்களின் அடிப்படைத் தேவைகள், பிரச்சனைகள் பற்றி இவர்கள் பேச மாட்டார்கள். அரசின் மக்கள் விரோத போக்கு, பண வெறிக்காக கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்யும் குற்றங்கள் பற்றி வாய் திறக்க மாட்டார்கள். சர்வதேச அளவில் இந்த 3 NGOக்களும் வல்லாதிக்க நாடுகளுக்கும், பெரு நிறுவனங்களுக்கும் ஆதரவாக போர்களால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க, அரேபிய நாடுகள் பல்வேறு ஈனச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் அரசு, மாவட்ட ஆட்சியரின் உதவியுடன் பல ஊர்களில் கிளைகளை நிறுவியுள்ளனர். பள்ளிகளில் JRC எனப்படும் மாணவர் செஞ்சிலுவை சங்கங்களும் கட்டாயமாக அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு அந்த NGOக்களின் போதனைகள் திணிக்கப்படுகின்றன. ஒரு பிரச்சனையை பாதிக்கப்பட்டவனின் பார்வையிலிருந்து பார்க்காமல், கார்ப்பரேட்டுகளின் பார்வையிலிருந்து பார்க்கும் கேவலமான ஆதிக்க மனோநிலையை உருவாக்குகின்றன. இந்த NGOக்களில் நல்லது செய்ய வேண்டும் என்ற உத்வேகத்துடன் இருப்பவர்கள், இதன் மூலம் தொழில் ரீதியாக பயனடைய வேண்டும் என நினைப்பவர்கள், அரசியல் ரீதியில் பயனடைய நினைப்பவர்கள், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்ல நினைப்பவர்கள், புகழ்விரும்பிகள் என பல தரப்பினர் சேர்கின்றனர். இதில் முதலில் நல்லது செய்ய வேண்டும் என நினைத்தவரும் புகழ் விரும்பியாக மாறிவிடுகிறார். இது தான் நிதர்சனம்.

இவர்கள் அரசுக்கும் மக்களுக்கும் இடையே நீண்ட தூரத்தை உருவாக்க முயல்கின்றனர். அரசை எளிதில் நெருங்க விடாமல் மக்களை தடுக்கின்றனர். ஒரு நிரந்தர தீர்வுக்காக போராடும் மக்களிடம் உதவுவது போல் சென்று தற்காலிக தீர்வை (ஆதிக்க வர்க்கத்தினர் காட்டிய வழிபடி) சொல்லி போராட்டத்தை நீர்த்து போக செய்கின்றனர். இவர்களை கண்டறிந்து களையெடுப்பது அவசியம். ஊர்களில் செயல்படும் இந்த NGOக்களின் கிளைகளை தகர்த்து எரிய வேண்டும். இவர்களின் வழிகாட்டுதலின் படி சிறிய சிறிய NGOக்கள் புதிய புதிய திட்டங்களுடன் தொடங்கப்பட்டு வருகின்றன. அவற்றில் பல NGOக்கள் ஊழல் ஒழிப்பு, தூய்மை, விபத்து தடுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரை முன் வைத்து தோற்றுவிக்கப்படுகின்றன. வெளியிலிருந்து பார்த்தால் கவர்ச்சியாக, நல்லது போல் தெரியும். ஆழமாக பார்த்தால் அவை தங்க முலாம் பூசப்பட்ட தகரங்கள் என்ற உண்மை விளங்கும்.

தொடங்கிய குறுகிய காலங்களில் அபார வளர்ச்சி. எப்படி பணம் வருகிறது என்றே தெரியாத அளவுக்கு திட்டங்கள். வாரம் ஒரு மேடை, விருது, பெயர், புகழ் என அதில் இயங்குபவர்களின் மனநிலையும் முடக்கப்படுகிறது. புகழ் தான் வாழ்க்கை என்ற எண்ணம் அவர்கள் நெஞ்சில் ஆழமாக விதைக்கப்படுகின்றன. மக்கள் முன் மகா உத்தமசீலர் போல் உருவகப்படுத்தப்படும் இவர்களை அரசியல் கட்சிகள் தேர்தல் நேரங்கள் பயன்படுத்திக்கொள்கின்றன என்பதும் கூடுதல் தகவல். இவர்கள் அரசியல் கட்சிகளை விட மிக மோசமானவர்கள், ஆபத்தானவர்கள்.

குறிப்பு: NGO அரசியல் பற்றி எதுவும் தெரியாமல் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என நண்பர்கள் வட்டத்தில் பணம் வசூலித்து உதவும் நல்ல மனம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். அவர்களை பற்றிய பதிவு இது அல்ல. ஆனால், நாம் உதவிக்கொண்டிருப்பது மட்டுமே நிரந்தர தீர்வு அல்ல. நாம் உதவுபவர்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து நிரந்தர உதவியை பெற்றுத்தர போராட வேண்டும்.

 

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter