மனித நேய மக்கள் கட்சியுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தைகளை ஏற்கனவே நடத்தியது. ஆனால், நாளடைவில் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி உடன்பாடுகளில் அவ்வளவாக அக்கறை காட்டப்படவில்லை என்றே சொல்லப்பட்டது.
ஆனால் இன்றைய தினம் தொகுதி பங்கீடு முடிவில், அக்கட்சிக்கு ஒரு தொகுதி கூட திமுக ஒதுக்கவில்லை. இதுகுறித்து மு.க.ஸ்டாலின் சொல்லும்போது, “மனித நேய மக்கள் கட்சி எங்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், தொகுதிகள் ஒதுக்க முடியவில்லை. எங்களுக்கு ஆதரவளித்தால் பின் வரும் காலங்களில் அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும்” என்றார்
இப்போது, சட்டமன்ற தேர்தலில் இடம் ஒதுக்குவதாக திமுக சொல்லிவிட்டதால், அநேகமாக மனிதநேய மக்கள் கட்சி திமுகவிருந்து விலகும் என்றும், அணி மாறி டிடிவி தினகரனிடம் சேர வாய்ப்புள்ளதாகவும் ஒரு தகவல் வெளியானது. இந்நிலையில், தங்களுக்கு சீட் தராது வருத்தம் தருவதாக பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் சொன்னதாவது:
“திமுகவிடம் சொந்த சின்னத்தில் போட்டியிட ஒரு இடம் கேட்டிருந்தோம். ஆனால் வேறு சின்னத்தில் போட்டியிடும் நிலை ஏற்பட்டது. இதனால் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.. இறுதியில் இடமில்லை என்று தெரிவித்துவிட்டனர்.
மனிதநேய மக்கள் கட்சிக்கு திமுக கூட்டணியில் ஒரு சீட் கூட தரப்படவில்லை. எதிர்காலத்தில் வாய்ப்புகள் தருவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். திமுக கூட்டணியில் தங்களுக்கு சீட் தராது வருத்தம் தருகிறது. அதே நேரத்தில் வேறு சின்னத்தில் போட்டியிடுவது தேர்தல் ஆணைய விதிமுறைக்குப் புறம்பானது என நாங்கள் கருதுகிறோம்.
இந்த சூழ்நிலையில், தேர்தல் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க அவசர தலைமை செயற்குழுக் கூட்டம் நடத்த உள்ளோம். மார்ச் 9ம் தேதி கூட்டம் நடைபெறும் இந்த கூட்டத்தில் எங்களது நிலைப்பாட்டை விரிவாக விவாதித்து எடுப்போம். பல்வேறு தரப்பிலிருந்தும் அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. அமமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து தலைமை செயற்குழுவில் விவாதித்து முடிவெடுக்கப்படும்” என்று பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் கூறினார்.