நாட்டில் எத்தனையோ தினங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அதுவெல்லாம் ஒரு சடங்காக கொண்டாடப்பட்டு வரும் சூழ்நிலையில், பெண்கள் தினம் என்பதும் ஒரு சடங்காக அல்லாமல், அது ஒரு மாற்றத்தின் தினமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டில் பெண்களின் உரிமைகளையும், அவர்களுக்கான சுதந்திரத்தையும் பேசி வரும் இத்தருணத்தில் பெண்களின் நிலையைப் பற்றி ஆராய வேண்டும். பெண்களுக்கு எதிராக நடந்த அநியாயங்களையும், அக்கிரமங்களையும் சற்று சிந்தித்துப் பார்த்தால், பெண்களின் நிலை எவ்வளவு மோசமாக இருக்கின்றது என்பதை நம்மால் அறிய முடியும்.
ஒரு பெண் தனக்கு மனைவியாகிவிட்டால், அவள் தனக்கு அடிமையாகிவிட்டது போன்ற மனநிலை பெரும்பாலான ஆண்களிடம் இருக்கின்றது. உண்மையில் பெண்கள் பிரச்சனை என்பது தவறான ஒரு ஆரம்பம். பிரச்சனை ஆண்களினதே. அவர்களது மன உளவியல் சார்ந்த தாழ்வுச்சிக்கலில் உருவானதே பெண் அடிமைத்தனம். ஆகவே அவர்கள் உளவியல் ரீதியாக சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள். இவர்கள் குணமடையும் பொழுது பெண்களைப் புரிந்துகொள்வார்கள். மதிப்பார்கள். பெண்கள் தம் இயல்பை பெண்மையை பற்றி பெருமை கொள்ள வேண்டும். ஆணாதிக்கம் விதைத்த பெண்களுக்கு எதிரான கருத்துக்களை தம் ஆழ் மனங்களிலிருந்து வேரோடு வெட்டி எறியவேண்டும்.
பெண்களைப் பாதுகாப்போம்… பெண்ணியத்தை போற்றுவோம்…