தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்த ராஜாமடம் ஆற்றில் இரவு நேரங்களில் மணல் கொள்ளை நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருட்டு மணல் ஏற்றிவிட்டு ஈசிஆர் சாலையில் வந்துகொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி, ஈசிஆர் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார். ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
நடுரோட்டில் லாரி கவிழ்ந்ததால், லாரியிலிருந்த திருட்டு மணல் சாலையில் கொட்டியது. இதனால் ஈசிஆர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராஜாமடம் ஆற்றில் அதிகளவில் மணல் கொள்ளை நடைபெறுவதாகவும், அதனை எதிர்த்து தட்டிக்கேட்பவர்கள் மிரட்டப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. அது மட்டுமின்றி அவ்வாறு திருட்டு மணல் ஏற்றிச் செல்லும் லாரிகள், ஈசிஆர் சாலையில் தொடர்ந்து அதிவேகத்தில் செல்வதாகவும், இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
கட்சி வேறுபாடின்றி, மிகப்பெரிய அளவில் இந்த மணல் கொள்ளை நடைபெறுவதாக கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனவே சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள், இவ்விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுத்து மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.