பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் போட்டது மத்திய அரசு ! ஆனால் இதில் ஊழல் நடந்துள்ளதாக, காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
ஆரம்பத்தில் இருந்தே இந்த விவகாரத்தை காங்கிரஸ் மிகப்பெரிய ஆயுதமாக வலுவாக கையில் வைத்து கொண்டது. அதனால்தான் நாடாளுமன்றத்தில் பெரிதாக இந்த விவகாரத்தை வெடிக்கவும் செய்தது. பிரதமரை நேரடியாக சுட்டிக்காட்டி தாறுமாறாக விமர்சித்தது. குறிப்பாக, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக பிரதமர் மோடி செயல்படுகிறார் என்று ராகுல்காந்தியே சரமாரியான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மற்றொரு பக்கம் இந்து என் ராம் இந்த விவகாரத்தில் புயலென நுழைந்தார். ரபேல் விமான பேரத்தில் பாதுகாப்பு அமைச்சகம் பேச்சு வார்த்தை நடத்தும்போதே, பிரதமர் அலுவலகம் தனியாக குறுக்கீடு செய்து பேச்சுவார்த்தை நடத்தியது என்பதை பகிரங்கப்படுத்தினார். மேலும் பிரதமர் அலுவலகம் எழுதிய கடிதத்தையும் வைத்து கட்டுரையாக வெளியிட்டு, எல்லாவற்றையும் புட்டு புட்டு வைத்தார். ஆனால் முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டதாக மத்திய அரசு முதலில் தெரிவித்தது. பின்னர் கசிந்ததாக கூறியது.
ஆனால் இன்றைய தீர்ப்பில் ‘ரபேல் ஆவணங்கள் பெற்றது தொடர்பாக கசிந்த ஆதாரங்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக கூறி விட்டது. இதனை மத்திய அரசு கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க முடியாதுதான். மற்றொரு விஷயம் அனில் அம்பானியை எப்படி நியமனம் செய்யலாம். அதையும் விசாரிக்கப் போகிறோம் என்றும் கூறியுள்ளது சுப்ரீம் கோர்ட்.
நாளை நாடாளுமன்ற முதல் கட்ட தேர்தல் நடக்க போகிறது. கடைசி நேரத்தில் கலர் கலரான அறிவிப்புகளுடன் தேர்தல் அறிக்கையை தாக்கல் செய்தால் மக்கள் கவனம் திசை திருப்பப்படும் என பாஜக கணக்கு போட்டது. ஆனால் நாளைக்கு தேர்தலை வைத்து கொண்டு இன்றைக்கு தீர்ப்பு இப்படி வரும் என்பது பாஜகவுக்கு ஷாக்தான் !
ரபேல் ஊழல் தொடர்பான விவரங்களையோ அல்லது அனில் அம்பானி நியமனம் தொடர்பான நியாயத்தையோ விளக்க முயற்சித்தாலும், அது தேர்தல் சமயத்தில் எடுபடாமல்தான் போகும் ! பிரச்சாரங்களும் இறுதிக்கட்ட நிலையில் இருக்கும்போது என்ன சொல்லி இந்த விவகாரத்தை பாஜக சரிகட்டும் என தெரியவில்லை.
அதேபோல, இவ்வளவு நாளாக இந்த விஷயத்தில் காங்கிரஸ் அளவுக்கு அதிகமாகவே தீவிரம் காட்டியது. இப்போது சுப்ரீம் கோர்ட் மத்திய அரசுக்கு எதிரான கேள்விகளை முன் வைத்துள்ளதால், கண்டிப்பாக இதனை தனக்கு சாதகமாகவே காங்கிரஸ் பயன்படுத்த முயற்சிக்கும் என தெரிகிறது.
சுருக்கமாக சொல்லபோனால், ரபேல் விவகாரத்தில் மத்திய அரசை காங்கிரஸ், மேலும் கழுவி கழுவி ஊற்றபோகிறது. இதெல்லாம் தேர்தலில் என்ன மாதிரியாக எதிரொலிக்க போகிறது, மக்களிடம் இது தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.