இன்று நாடு முழுக்க லோக்சபா தேர்தல் முதற்கட்டமாக நடந்து வருகிறது. மொத்தம் 91 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது.
ஆந்திர பிரதேசம், அருணாசலப்பிரதேசம், உத்தரகாண்ட், மிசோரம், நாகலாந்து, சிக்கிம், அந்தமான் மற்றும் நிக்கோபார், லட்சத்தீவு, தெலுங்கானா, அசாம், பீகார், சட்டீஸ்கர், ஜம்மு காஷ்மீர், மஹாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, திரிபுரா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இன்று தேர்தல் நடக்கிறது.
இதில் உத்தர பிரதேசத்தில் முதற்கட்டமாக 8 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. அதில் நொய்டா தொகுதியும் ஒன்றாகும். இந்த நிலையில் நொய்டாவில் தேர்தல் அதிகாரிகளுக்கு ”நமோ” பெயர் பொறித்த உணவு பார்சல் வழங்கப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
போலீஸ் அதிகாரிகளே இந்த உணவு பொட்டலங்களை வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீஸ் காரில்தான் இந்த பொட்டலங்கள் எடுத்து வரப்பட்டு இருக்கிறது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது.
அதேபோல் வாக்காளர்களுக்கும் நமோ உணவு பார்சல் வழங்கப்பட்டுள்ளது. காவி நிற பாக்கெட்டில் பேக் செய்யப்பட்டு இருந்த அந்த பார்சலில் நமோ என்று எழுதப்பட்டு இருந்தது. ஆனால் இது யாருடைய நிறுவனம் என்று விவரம் வெளியாகவில்லை.
அதேபோல் இது போலீசுக்கு எப்படி கிடைத்தது, யார் இந்த உணவை ஏற்பாடு செய்தது, இதை வாக்காளர்களுக்கு கூட கொடுக்க யார் அனுமதி அளித்தது என்று கேள்வி எழுந்து இருக்கிறது.இதுகுறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.