Home » தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் விடுமுறை!!

தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் விடுமுறை!!

0 comment

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் நேற்று சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட சில இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கைப்பற்றியது குறித்த தகவல் எதுவும் தேர்தல் ஆணையத்துக்கு வரவில்லை. தமிழகம் முழுவதும் நடைபெறும் வாக்குப்பதிவை சென்னை, தலைமை செயலகத்தில் இருந்து கண்காணிக்க ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 16 மாவட்ட வருவாய் அலுவலர்கள் (டிஆர்ஓ) உட்கார்ந்து கம்ப்யூட்டர் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். வாக்குப்பதிவு மையங்களில் இருந்து பெறப்படும் வெப்கேமரா தகவல்களை இவர்கள் நேரடியாக பார்க்க முடியும். அதேபோன்று பறக்கும் படை, கண்காணிப்பு குழுவினரை கண்காணிக்க 2 டிஆர்ஓ தனியாக இந்த கட்டுப்பாட்டு அறையில் இருப்பார்கள். இதுதவிர, 1950 என்ற இலவச தொலைபேசி எண்ணில் வரும் புகார்கள் பெற்று நடவடிக்கை எடுக்கவும் தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 3வது மாடியில் தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18ம் தேதி நடைபெறுவதால், 16ம் தேதியில் இருந்து 18ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று நாட்கள் மதுபான கம்பெனியில், மதுபானம் உற்பத்தி செய்யவும், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வாகனங்களில் மதுபானங்கள் ஏற்றி செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23ம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை ஆகும்.இவ்வாறு அவர் கூறினார்.

வெடிகுண்டு வீச்சு குறித்து சிஇஓ-டிஜிபி ஆலோசனை
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளன. இதையடுத்து இன்று மாலை 6 மணிக்கு அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் கண்காணிப்பு அதிகாரிகள், போலீஸ் கமிஷனர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் நான் (சிஇஓ) தலைமை செயலகத்தில் இருந்தபடி ஆலோசனை நடத்துகிறேன்.

இந்த ஆலோசனையின்போது தமிழகத்தில் தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட புதிய டிஜிபியும் கலந்து கொள்கிறார். கூட்டத்தில், தேர்தலுக்கு முன் எடுக்கப்பட வேண்டிய இறுதிக்கட்ட பணிகள் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் முடிவு எடுக்கப்படும் என்று சத்யபிரதா சாஹு கூறினார்.

இந்நிலையில், புதிய டிஜிபி அசுதோஷ் சுக்லா நேற்று மதியம் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, சென்னையில் திமுக பகுதி செயலாளர் வீட்டில் வெடிகுண்டு வீசியது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகவும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் டிஜிபி தன்னிடம் கூறியதாக தேர்தல் அதிகாரி கூறினார்..

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter