சாப்ட்வேர் கோளாறால் இன்று இரவு 8.30 மணிவரை 155 ஏர் இந்தியா விமானங்கள் காலதாமதமுடன் இயங்கும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா விமான நிறுவன குழுமம் நாளொன்றுக்கு அலையன்ஸ் ஏர் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட துணை நிறுவனங்களுடன் சராசரியாக 674 விமானங்களை இயக்குகிறது. இந்நிலையில், ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் இணையதளம் இன்று அதிகாலை 3.20 மணியில் இருந்து திடீரென செயலிழந்தது. இதையடுத்து, இந்தியா முழுவதும் ஏர் இந்தியா விமான சேவைகள் மிக பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. சென்னை விமான நிலையத்திலும் ஏர் இந்தியா விமானங்கள் வந்து சேருவது, புறப்படுவது போன்றவற்றில் பல மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகளுக்கான போர்டிங் பாஸை ஊழியர்கள், கைகளால் எழுதியே வழங்கினர். இதனால், நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருந்தனர்.
சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களும் 2 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு செல்கின்றன. அதே போல் வெளியூர்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சென்னைக்கு வரும் விமானங்களும் பல மணி நேரம் தாமதமானது. இணையதள பாதிப்பால் எந்த விமானம் எப்போது புறப்படும், எப்போது வரும் என்று அதிகாரிகளால் பயணிகளுக்கு சரியாக அறிவிக்க முடியவில்லை. சென்னையில் இருந்து சிங்கப்பூர், ஷார்ஜா, இலங்கை மற்றும் டெல்லி, மும்பை, கொல்கத்தா, மதுரை, திருச்சி, கோவை உள்பட பல இடங்களுக்கு புறப்பட்டு செல்லும் விமானங்கள் மற்றும் வந்து சேரும் விமானங்கள் என 25க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகி ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
இதுபற்றி ஏர் இந்தியா விமான நிறுவன தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் அஷ்வனி லோஹானி கூறுகையில்: ஏர் இந்தியாவின் பயணிகள் சேவை சிஸ்டம் (பி.எஸ்.எஸ்.) என்ற சாப்ட்வேர் ஏறக்குறைய 6 மணிநேரம் வரை முடங்கியது. பயணிகளின் உடைமைகள் மற்றும் முன்பதிவு ஆகியவற்றை ஆய்வு செய்யும் இந்த சாப்ட்வேர் செயல்படாத நிலையில், இன்று இரவு 8.30 மணிவரை 155 விமானங்கள் சராசரியாக 2 மணிநேரம் காலதாமதமுடன் இயங்கும். இதன்பின் மீண்டும் நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.