தேர்தல் பிரச்சாரங்களின் போது விதிகளை மீறி பேசி வரும் பிரதமர் மற்றும் அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்து, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்ற்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான சுஷ்மிதா தேவ், உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் தேர்தல் நடத்தை விதிகளை மீறி, பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகிய இருவரும் பிரச்சார கூட்டங்களில் பேசி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மோடி மற்றும் அமித்ஷா இருவரும் தேர்தல் பிரச்சாரங்களின் போது, பாதுகாப்பு படையினர் குறித்து பேசுவதாகவும் இது தேர்தல் நடத்தை விதிமீறல் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பல முறை புகார் கூறியும், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் தாக்கல் செய்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ராணுவ நடவடிக்கை பற்றி பேச கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் தடை உள்ள போதும், மோடி மற்றும் அமித்ஷா இருவரும் தங்களது பிரச்சார கூட்டங்களில் வாக்காளர்களை தூண்டும் வகையில் பேசி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தேச பாதுகாப்பு நடவடிக்கைகளை தங்களது அரசியல் சாதனையை போலவே இருவரும் பேசி வாக்கு கேட்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
எனவே மோடி மற்றும் அமித்ஷா மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் சுஷ்மிதா தேவ் தாக்கல் செய்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
சுஷ்மிதா தேவின் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரும் வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளது.