அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் அரசின் தடை உத்தரவை மீறி பிளாஸ்டிக் பைகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வெறும் கண்துடைப்புக்காக மாதம் ஒருமுறையோ, வாரம் ஒருமுறையோ ஆய்வு என்கிற பெயரில் சிறு வியாபாரிகளிடம் தொடர்ந்து அபராதம் வசூலிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இது ஒருபுறமிருக்க, பிளாஸ்டிக் பயன்பாட்டிற்காக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டு சரிகட்டப்படுவதாகவும் பரவலாக கூறப்படுகிறது.
அதிரையில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவது குறித்து அதிரை பேரூராட்சி நிர்வாகத்திற்கும், அதிகாரிகளுக்கும் ஏற்கனவே பலமுறை ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பேரூராட்சியும், அதன் அதிகாரிகளும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே அமைதி காக்கின்றனர்.
பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து பலமுறை ஆதாரத்துடன் பேரூராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு அதிரை எக்ஸ்பிரஸ் தெரியப்படுத்திவிட்டது. ஆனாலும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலை தொடருமாயின், அதிரை பேரூராட்சியின் மெத்தனப்போக்கு குறித்து மேலதிகாரிகளின் கவனத்திற்கு ஆதாரத்துடன் அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவித்துக்கொள்கிறோம்.