Home » அதிதீவிர புயலான பானி புயல், ஒடிசா மாநிலம் பூரி பகுதியில் கரையை கடந்தது..!!

அதிதீவிர புயலான பானி புயல், ஒடிசா மாநிலம் பூரி பகுதியில் கரையை கடந்தது..!!

0 comment

பானி புயலின் கண்பகுதி முழுவதுமாக கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. #CycloneFani

பூரி, தென்கிழக்கு வங்கக்கடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் அது அதிதீவிர புயலாக உருவெடுத்தது. பானி என பெயரிடப்பட்ட அந்த புயல் தமிழகத்தின் வடகடலோர பகுதியில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது மிக தீவிர புயலாக மாறி வட கிழக்கு திசை நோக்கி நகர்ந்து, ஒடிசாவை நோக்கி சென்றது. இந்த புயலானது, இன்று காலை 8 மணி முதல் 11 மணி வரை கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டது.

இதன்படி, பானி புயல் கோபால்பூர்-சந்த்பாலிக்கு இடையே கரையைக் கடக்கிறது என்று ஒடிசா வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அசுர புயல் வீசி வரும் நிலையில் ஒடிசாவின் தலைமை செயலாளர், அனைத்து துறை அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார்.

சாகிகோபால் பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். ஒடிசாவில் பானி புயல் காரணமாக மணிக்கு 240 – 245 கி.மீ வரை சூறாவளி காற்று வீசி வருகிறது. ஒடிசா கடற்கரை ஓரங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்குகிறது. ஒடிசாவின் வரலாற்றில் இல்லாத அளவிற்கு அசுர காற்று வீசி வருவதால் மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

சென்னையில் இருந்து இந்திய கடலோர காவல் படையின் 2 கப்பல்கள் மீட்பு பணிகளுக்காக ஒடிசா விரைந்து உள்ளன.

பானி புயல் பாதிப்புகளுக்கு உதவிகள் பெற 1938 என்ற உள்துறை அமைச்சகத்தின் உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

ஒடிசா வானிலை மைய இயக்குனர் பிஸ்வாஸ் கூறியதாவது:-

மிகவும் கடுமையான சூறாவளி காற்றுடன் மழை காலை 8 மணிக்கு தொடங்கியது. புயலின் கண் பகுதி ஏற்கனவே நிலப்பகுதிக்குள் நுழைந்துள்ளது. இது கரையை கடக்க 2 மணிநேரம் ஆகும். புயல் கரையை கடக்கும் முக்கிய நிலப்பகுதி பூரிக்கு அருகில் உள்ளது. அது காலை 10.30 வரை தொடரும் என கூறினார்.

அதன்படி, புயலின் கண் பகுதி கரையை கடந்து உள்ளது. அதிதீவிர புயலான பானி புயல் ஒடிஷா மாநிலம் பூரி பகுதியில் கரையை கடந்தது. ஒடிசாவின் கஞ்சம் பகுதியை சூறையாடியது பானி புயல். பூரி, கஞ்சம் மாவட்டத்தில் ஆயிரகணக்கான மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

மேற்கு வங்கம் நோக்கி புயல் நகர்ந்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அந்த மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தனது அனைத்து பிரசார பயணங்களையும் ரத்து செய்தார்.

Source:- தினத்தந்தி

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter