லோக்சபா தேர்தல் களத்தில் தேசியவாதம், தேசபாதுகாப்பு விவகாரங்கள்தான் பாஜகவின் பிரதான முழக்கங்களாக இருக்கின்றன. அதேநேரத்தில் இப்படி தேசியவாதம், எல்லையில் ராணுவ வீரர்கள் என பேசிக் கொண்டே நாட்டின் பாதுகாப்பு துறை பலவீனங்களை பட்டவர்த்தனமாக போட்டு உடைப்பது எப்படி தேசப்பற்றாகும் ? என்பதுதான் ஜனநாயகவாதிகளின் கேள்வி.
ஒவ்வொரு தேர்தலின் போதும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்கிற உணர்வுப்பூர்வமான முழக்கத்தை பாஜக முன்வைக்கும். ஆனால் இந்த முறை தேர்தல் களத்தில் அந்த கோஷமே காலாவதியாகிப் போனது. ஏனெனில் 5 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் பாஜக, ராமர் கோவில் கட்ட எந்த ஒரு நடவடிக்கையுமே எடுக்கவில்லை. இதனால்தான் பல்லாயிரக்கணக்கான சாமியார்கள் போபாலில் பாஜக வேட்பாளர் சாத்வி பிரயாக்கை எதிர்த்து பிரசாரம் செய்கின்றனர்.
இப்படி அயோத்தி விவகாரத்தை முன்வைக்க முடியாத பாஜக, தேசப் பாதுகாப்பு, தேசியவாதம் என்கிற புதிய கோஷத்தை பேசுகிறது. எல்லையில் ராணுவ வீரர்களை பாதுகாக்கிறோம்; குண்டுவெடிப்புகளே நடைபெறவில்லை, பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினோம் என்கிற பெருமிதங்கள் பாஜக கூட்டங்களில் குறிப்பாக பிரதமர் உரைகளில் தெறிக்கவிடப்படுகிறது.
எதிர்க்கட்சிகளோ ரபேல் விவகாரத்தை முன்வைத்து மோடியை கேள்வி கேட்கின்றன. ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் முறைகேடு பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குடைச்சல் கொடுத்தார். இதற்கு பதிலளித்த பிரதமர் மோடியோ, உங்களது தந்தை ராஜீவ்காந்தி ஊழல்வாதிகளில் நம்பர் 1-ஆகவே மடிந்து போனவர் என்றார். அத்துடன் நாட்டின் போர்க்கப்பலை குடும்ப உல்லாசத்துக்கு ஏதோ தனியார் டாக்சி போல பயன்படுத்தினார் ராஜீவ் காந்தி எனவும் அதிரடி காட்டினார்.
இதனைத் தொடர்ந்து போர்க்கப்பலை ராஜீவ் காந்தி பயன்படுத்தினாரா ? இல்லையா ? என அனைத்து தரப்பிலும் விவாதம் களைகட்டுகிறது. மேடைகளில் தேசியவாதம், தேசப்பற்று என பேசுவதும் பேசி முடிக்கும் போது பாதுகாப்புத் துறையை களங்கப்படுத்தும் வகையில் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும் எவ்வளவு பெரிய அவமானம்? என்பதை அரசியல்வாதிகள் உணருவதாகவே இல்லை என்பதுதான் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டோரின் ஆதங்கம்.