இந்திய மக்களவை தேர்தலில் மோடி வெற்றி பெற்றதற்கு, சர்வதேச தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரிட்டனின் பிரபல பத்திரிகையான தி கார்டியனும், அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையும் மோடியின் வெற்றியை சரமாரியாக விமர்சித்துள்ளன.
மோடியின் வெற்றி குறித்து தலையங்கம் வெளியிட்டுள்ள கார்டியன் பத்திரிகை, மோடி மீண்டும் பிரதமராவது உலகத்திற்கே கெட்ட செய்தி என வெளுத்து வாங்கியுள்ளது. கடந்த 5 ஆண்டு கால மோடியின் ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் மோசமாக தான் இருந்தது. இருப்பினும் அவர் தனிப்பெரும்பான்மையுடன் வென்றிருப்பது உலக நாடுகள் அனைத்திற்குமே மோசமான ஒரு தகவல் என சாடியுள்ளது.
மோடியின் இந்த வெற்றி இந்தியாவின் ஆன்மாவை மீண்டும் இருண்ட காலத்திற்கு எடுத்து செல்ல போவதாகவும் எச்சரித்துள்ளது. பொய் பிரச்சாரம் மற்றும் வெறுப்பு அரசியல் மூலம் இந்திய மக்களை மோடி மயக்கியுள்ளது துரதிருஷ்டவசமாது என கூறியுள்ளது.
இந்து தேசியவாதம் என்ற பெயரில் நாட்டை மோசமான பாதைக்கு அழைத்துச்செல்லும் இயக்கத்தின் அரசியல் பிரிவு தான் பாரதிய ஜனதா கட்சி என்று தி கார்டியன் தலையங்கத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்து உயர் சாதியினரின் ஆதிக்கம், பெரு முதலாளிகளுக்கு ஆதரவு, வெறுப்பு அரசியல், மாநில அரசு அதிகாரங்களை கட்டுப்படுத்துதல் இவையே பாரதிய ஜனதாவின் நிலைப்பாடு.
இந்தியாவிலுள்ள உண்மை சூழல் இது தான். ஆனால் பொய் தகவல்கள் மற்றும் பிரிவினை வாதத்தை வைத்து மோடி பிரச்சாரம் செய்து, தேர்தலில் பெரு வெற்றியை ருசித்துள்ளதாக கார்டியன் குற்றம் சாட்டியுள்ளது.
பிரபல அமெரிக்க பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் மோடியின் வெற்றிக்கு பொய் பிரச்சாரங்கள் மற்றும் வெறுப்பு அரசியலை முன்னிறுத்தியதே காரணம் என கூறப்பட்டுள்ளது.
தி கார்டியன், நியூயார்க் டைம்ஸ் 2 பத்திரிக்கைகளுமே சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான மற்றும் நம்பகத்தன்மை உடையது என பெயர் வாங்கியுள்ளன. மோடியின் வெற்றி குறித்து மேற்கண்ட இரு பத்திரிகைகளும் தெரிவித்துள்ள கருத்துகளால், சர்வதேச அளவில் மோடியின் வெற்றி குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.