Home » தண்ணீர் பஞ்சத்தின் உச்சம்.. சென்னையில் தீயை அணைக்க நீரின்றி தவித்த தீயணைப்பு வீரர்கள்..!

தண்ணீர் பஞ்சத்தின் உச்சம்.. சென்னையில் தீயை அணைக்க நீரின்றி தவித்த தீயணைப்பு வீரர்கள்..!

0 comment

தமிழகத்தில் பருவமழை பலனளிக்காததால் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தண்ணீர் பஞ்சம் தலைத் தூக்க தொடங்கிவிட்டது. இந்த நிலையில் சென்னையை பற்றி கேட்கவே வேண்டாம்.

கடும் வெப்பத்தாலும் பருவமழை பொய்த்துவிட்டதாலும் சென்னைக்கு தண்ணீர் கொடுக்கும் ஏரிகளான புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் உள்ளிட்டவை வறண்டுவிட்டன.

இதனால் கடந்த இரு மாதங்களாக தண்ணீர் பஞ்சம் அதிகளவில் காணப்படுகிறது. நிலத்தடி நீரும் குறைந்துவிட்டதால் பொதுமக்கள் தண்ணீருக்காக பெரும் திண்டாட்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் மேடவாக்கத்தில் உள்ள குப்பைக் கிடங்கு ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். எனினும் தீயணைப்பு துறையினர் தண்ணீர் இல்லாததால் தண்ணீர் கொடுத்தால் வருவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து உள்ளூர் பஞ்சாயத்து பணியாளர்கள் அருகில் உள்ள சித்தேரியிலிருந்து நீர் கொண்டு வந்தனர். அத்துடன் தீயையும் பஞ்சாயத்து பணியாளர்களே எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி தண்ணீரை அணைத்து வைத்தனர்.

இதுகுறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பொதுமக்கள் கூறுகையில் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தோம். ஆனால் அவர்களோ தீயை அணைக்க தண்ணீர் கொடுக்குமாறு கேட்டனர். இதையடுத்து சித்தேரியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்தோம். எனினும் குறிப்பிட்ட நேரத்துக்கு வீரர்கள் வரவில்லை என்றனர்.

இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் எங்களது அனைத்து வாகனங்களிலும் தேவையான தண்ணீர் உள்ளது. பெரிய தீவிபத்து ஏற்பட்டால் நாங்கள் மெட்ரோ வாரியத்திடமிருந்து தண்ணீர் கேட்போம். அது மட்டுமல்லாது எங்களுடைய வாகனத்தில் அருகிலிருக்கும் ஏரி அல்லது குளத்திலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு தேவையான உபகரணங்கள் உள்ளன.

இந்தச் சம்பவம் தகவல் பரிமாற்ற பிரச்சினை காரணமாக நடந்திருக்கலாம். மேடவாக்கத்தில் தீவிபத்து நடந்த அதே நேரத்தில் பீர்க்கங்கரணையிலும் தீவிபத்து ஏற்பட்டதால் தீயணைப்பு கட்டுப்பாட்டு துறையினர் தண்ணீர் தேவை என தவறாக தெரிவித்திருப்பர் என்றார் அந்த அதிகாரி.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter