தமிழகத்தில் பருவமழை பொழித்து போனதால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனை, சமாளிக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், அனைத்து கோயில்களிலும் மழை வேண்டி யாகம் நடத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் கோவில்களில் மழை வேண்டி அமைச்சர்களும், அதிமுகவினரும் யாகங்கள் நடத்தினார்கள்.
இதற்கிடையில், தண்ணீர் பிரச்சனைக்காக போராட்டம் நடத்திவரும் தி.மு.க. யாகம் செய்து தண்ணீர் சிக்கலை போக்கிடலாம் என்றால் பூசாரியையே முதலமைச்சராக தேர்ந்தெடுத்திருக்கலாமே என விமர்சனம் செய்திருந்தனர். இந்நிலையில், சென்னை உள்பட பல இடங்களில் நேற்று மழையும் பெய்தது. வெயிலிலும், தண்ணீர் இல்லாமலும் தவித்து வரும் மக்களுக்கு இது சிறு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறிகையில் : தி.மு.க.வினர் யாகம் நடத்தினாலும் எதிர்க்கிறார்கள் யோகா நடத்தினாலும் எதிர்க்கிறார்கள். ஆனால் தண்ணீருக்காக போராட்டம் நடத்துகிறார்கள். போராட்டம் நடத்தினால் தண்ணீர் வந்துவிடுமா ? யாகம் நடத்தியதால் தான் மழைபெய்துள்ளது என கூறியுள்ளார்.
அதிமுக யாகம் நடத்தியதால்தான் தமிழகத்தில் மழை பெய்துள்ளது என மருத்துவம் படித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளது பலருக்கும் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.