கர்நாடக அரசியல் குழப்பம் தொடர்பாக, பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க மாநில முதல்வருமான மமதா பானர்ஜி.
கர்நாடக அரசியல் நெருக்கடி குறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், “காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பூட்டி வைக்கப்பட்டிருப்பதை நாங்கள் ஊடகங்கள் மூலமாக, தெரிந்து கொண்டோம். ஊடகங்கள் அந்த பகுதிக்குள் நுழைவதைத் தடுக்கின்றனர். பாஜக குதிரை பேரத்தில் தீவிரமாக ஈடுபடுகிறது. சில நாட்களுக்கு முன்புதான், லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. அவர்கள் இப்போது, நாட்டைக் கவனிக்க வேண்டும். ஆனால் ஏன் இவ்வளவு பேராசை கொண்டவர்களாக உள்ளனர்? இது அழுக்கான அரசியல்.
இன்று சில கட்சி ஆட்சியில் உள்ளது, நாளை வேறு சில கட்சிகள் ஆட்சியில் இருக்கும். மொத்தமாக அரசியல் சாசனம் உடைக்கப்பட்டுள்ளது. ” இவ்வாறு மமதா பானர்ஜி தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், மாநில கட்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம். கர்நாடகாவுக்குப் பிறகு அவர்கள் மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் செல்வார்கள். இதற்கு எதிராக அனைத்து பிராந்திய கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஊடகங்கள் கூட இதற்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என்று தெரிவித்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரான டெரெக் ஓ பிரையன் கூறுகையில், கர்நாடகாவில் வெட்கமில்லாத குதிரை பேரம் நடக்கிறது. இன்று மேற்கு வங்க சட்டசபையில் இதற்கு கடுமையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த பிரச்சினைக்கு எதிராக, திரிணாமுல் காங்கிரஸ் குரல் எழுப்பியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The shameless #HorseTrading in the Karnataka assembly was strongly condemned in the Bengal assembly today. Also, in #Parliament Trinamool showed solidarity on this issue in both Houses : Derek
— All India Trinamool Congress (@AITCofficial) July 10, 2019