திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆயிரம் விளக்கு உசேன் வயது முதிர்ச்சி காரணமாக இன்று அதிகாலை காலமானார்.
திமுக கட்சியில் சென்னையில் மிக முக்கியமான உறுப்பினர்களாக இருந்தவர்களில் ஒருவர்தான் ஆயிரம் விளக்கு உசேன். ஆயிரம் விளக்கு தொகுதியில் நின்று முதல்முறை தோல்வி அடைந்த இவர், பின் அடுத்த சட்டமன்ற தேர்தலில் வென்று எம்எல்ஏ ஆனார்.
அதிலிருந்து இவர் ஆயிரம் விளக்கு உசேன் என்ற பெயரால் அடையாளப்படுத்தப்பட்டார். சென்னையில் திமுகவிற்கு இஸ்லாமிய வாக்குகள் கிடைக்க இவரின் பிரச்சாரம் முக்கிய காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
எம்எல்ஏ பதவி மட்டுமில்லாமல், கட்சி தொடர்பான பல்வேறு பணிகளிலும் அவர் ஈடுப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக தலைமை நிலைய செயலாளராகவும் ஆயிரம் விளக்கு உசேன் பணியாற்றினார்.
இந்த நிலையில் ஆயிரம் விளக்கு உசேன் வயது முதிர்ச்சி காரணமாக இன்று அதிகாலை காலமானார். சென்னை லாயிட்ஸ் காலனியில் அவர் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த அவர் இன்று காலமானார்.
இன்று மாலை அவரின் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்ட தலைவர்கள் இந்த இறுதிச்சடங்கில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.