தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது. டெங்கு காய்ச்சலால் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு தஞ்சை மற்றும் திருச்சி தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிரையில் உள்ள அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதிகளும் இல்லை. அதிரையில் நிலவும் மிக மோசமான சுகாதார சீர்கேட்டினாலும் அதை கண்டுகொள்ளாத பேரூராட்சியினாலும் நாளுக்கு நாள் டெங்குவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டெங்கு மட்டுமின்றி மலேரியா , டைஃபாய்டு முதலான நோய்களும் பரவி வருகின்றன.
பொதுமக்களும் தங்கள் மனம்போன போக்கில் குப்பைகளை கொட்டுவதும் அதிரையில் நிலவும் சுகாதார சீர்கேட்டிற்கு காரணம். பொதுமக்கள் பேரூராட்சியை மட்டும் குறை கூறாமல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். சுகாதாரத்துறையினரும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். இனியும் தாமதிக்காமல் அதிரையில் பரவும் டெங்குவை ஒழிக்க பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் கோரிக்கையாகவும் உள்ளது.