நாலா பக்கம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பவும், “பகவத் கீதையை யாரும் கட்டாய பாடமாக படிக்க வேண்டாம்.. விருப்பம் இருந்தால் படிக்கலாம்” என்று அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா திருப்பி போட்டு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே அமித் ஷா சொன்ன ஒரே நாடு ஒரே மொழி என்ற பேச்சு இன்னும் அடங்காத நிலையில் திடீரென ஒரு அறிவிப்பு வெளியானது.
அதாவது, அண்ணா பல்கலைக்கழகத்தின் CEG கேம்பசில் 2019-ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில், தத்துவப் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதில், பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத் கீதை மற்றும் தத்துவவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படுவதாக இந்த அறிவிப்பு வெளியானது.
இந்தி திணிப்பு விவகாரத்தில் கொதித்து போய் கிடக்கும் இந்த சமயத்தில், இப்படி ஒரு திணிப்பா என்று தமிழக அரசியல் கட்சிகள் தலைவர்கள் ஆவேசப்பட்டனர்.
இந்திய – மேல்நாட்டு தத்துவப் படிப்பு” என்ற பெயரில் சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்று திமுக தலைவர் ஸ்டாலினும், ஈராயிரம் ஆண்டுக்கு முன்பே, திருக்குறள் எனும் மானுடச் சாசனம் இருக்க, பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் பகவத் கீதையைச் சேர்ப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது” என்று சீமானும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் வலிமையான கண்டனங்களை பதிவு செய்தனர்.
பகவத் கீதையை விருப்பப் பாடமாக அல்லாமல் கட்டாயப் பாடமாக படிக்கவேண்டும் என்று அறிவுறுத்தவும்தான் இந்த விஷயத்தில் எதிர்ப்பு அதிகமாக தொடங்கியது. பல மதங்களை சேர்ந்த மாணவர்கள் படிக்கும்போது, இப்படி இந்து மதத்தின் புனித நூலாக கருதப்படும் பகவத் கீதையை மட்டும் கட்டாய பாடமாக கொண்டு வந்தால், மாணவர்களிடையே வெறுப்பை ஏற்படுத்தும் என்று கல்வியாளர்களும் கேள்வி எழுப்ப தொடங்கினர்.
இவ்வளவு எதிர்ப்பும் ஒரே நேரத்தில் கிளம்பவும், திடீரென அறிவிப்பினை பின்வாங்கி உள்ளது பல்கலைக்கழகம். இது சம்பந்தமாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விளக்கம் அளித்துள்ளார். அவர் தெரிவிக்கும்போது, “தத்துவவியல், பகவத்கீதை உள்ளிட்ட பாடப்பிரிவுகள் விருப்ப மாடமாக வழங்கப்பட்டுள்ளது. விருப்பம் இருந்தால் மட்டுமே பகவத் கீதை தேர்ந்தெடுத்து படிக்கலாம். மற்றபடி கட்டாயம் கிடையாது. 12 பாடங்கள் உள்ளடங்கிய விருப்பப்பாட பட்டியலில் இருந்து மாணவர்கள் தங்களுக்கு வேண்டிய பாடத்தை தேர்வு செய்து கொள்ளலாம் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும். சமஸ்கிருதம், மகாபாரதம் ஆகியவற்றை கட்டாயப்படுத்தியுள்ளதாக வெளியான தகவல் தவறு” என்றார்.
மத சார்பின்மைக்கு எதிராக இது அமையும் என்று ஒரே நாளில் பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்ததால், பல்கலைக்கழகம் தனது முடிவை அதிரடியாக மாற்றி கொண்டுள்ளதாக தெரிகிறது.