ஒரே மொழி, ஒரே மதம் என்று கூறினால் இந்தியாவில் பெரிய பிரச்சனை வரும், இந்தியாவின் பன்முக தன்மைக்கு ஆபத்து நேரிடும் என்று நோபல் வெற்றியாளர் அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜி 2019ம் ஆண்டில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை பெற்று இருக்கிறார். அவரின் காதல் மனைவி எஸ்தர் டூஃப்லோ மற்றும் மெக்கேல் கிரெமர் ஆகியோருக்கு கூட்டாக பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் மத்திய பாஜக அரசின் கொள்கைகளை கொஞ்சம் அதிகமாக விமர்சித்து வருகிறார். மத்திய பாஜக அரசிடம் சரியான பொருளாதார திட்டங்கள் இல்லை என்று கூறி உள்ளார்.
முக்கியமாக ஏழைகளிடம் பணம் சென்று சேர்வதற்கான சரியான திட்டங்கள் அரசிடம் இல்லை என்று நிறைய புகார்களை இவர் அடுக்கடுக்காக தெரிவித்தார். இந்த நிலையில் அபிஜித் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது அபிஜித் பானர்ஜி மொழிக்கொள்கை குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். அதில், நம் நாட்டில் இப்போது கலவரங்கள் அதிகரித்து வருகிறது. மக்கள் இடையே சகிப்புத் தன்மை குறைந்துவிட்டது. வேற்றுமைகளை பொறுத்துக் கொள்ளாமல் மக்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்.
உடல் ரீதியாக மட்டும் இந்த தாக்குதல்கள் நடக்கவில்லை. மனரீதியாகவும், பண ரீதியாகவும் மக்கள் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். இந்தியா என்பதே வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான். ஆனால் அதையே தற்போது சிதைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்தியா என்பது ஒரு மொழி கிடையாது, ஒரு மதம் கிடையாது, நமக்கு ஒரு எதிரி கிடையாது. இந்தியா என்பது பன்முகத்தன்மை கொண்ட நாடு. நாம் அதை மதிக்க வேண்டும். நம்முடைய சிறப்பே அதில்தான் இருக்கிறது. நாம் பெரிய ஆபத்தில் இருக்கிறோம்.
1.3 பில்லியன் மக்கள் 122 மொழிகளுக்கும் அதிகமாக பேசுகிறார்கள். அதிலும் மக்கள் பேசும் முறை மாறுபடுகிறது . நம்முடைய கலாச்சாரம் மாறுபடுகிறது. திராவிடர்கள் தொடங்கி மங்கோலியர்கள் வரை நம்மிடையே பல இனக்குழு உள்ளது. இதை நாம் எல்லோரும் மதிக்க வேண்டும் என்று அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.